சின்னசேலம் ஒன்றியத்தில் மழையால் சேதமடைந்த பருத்தி பயிர்களை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு
சின்னசேலம் ஒன்றியத்தில் மழையால் சேதம் அடைந்த பருத்தி பயிர்களை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் ஆய்வு செய்தார்
சின்னசேலம்
பருத்தி பயிர் சேதம்
சின்னசேலம் ஒன்றியத்தில் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பருத்தி பயிர்கள் பெருமளவில் சேதம் அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
இந்த நிலையில் சேதம் அடைந்த பருத்தி பயிர்களை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேரில் ஆய்வு செய்து சேத விவரங்களை வேளாண்மை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளிடம் கேட்டறிந்தார்.
அப்போது விவசாயி ஒருவர், ஒரு ஏக்கர் நிலத்தில் பெண் பருத்தி விதை நடவு செய்து அதோடு 10 சென்ட் நிலத்தில் ஆண் பருத்தி விதை நடுவு செய்து பூ பூத்த உடன் 3 மாத காலத்துக்கு தினந்தோறும் 10 ஆட்களைக் கொண்டு ஆண் பூவின் மகரந்த சேர்க்கையை எடுத்து பெண் பூவோடு தேய்க்கும் ஒட்டுரக பணியின் மூலம் பருத்திக் காய்கள் வளர்ச்சி பெற ஒரு ஏக்கருக்கு ரூ.1½ லட்சம் வரை செலவு ஆகி உள்ளது. இந்த நிலையில் 6 மாதகால பயிரான பருத்தி வெடித்து அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் மழையால் நனைந்து சேதம் அடைந்துள்ளதால் எங்களு க்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.
பதிவு முகாம்
முன்னதாக எலியத்தூர் கிராமத்தில் நடந்த கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் நடந்த பயிர் காப்பீடு திட்ட பதிவு முகாமை பார்வையிட்ட கலெக்டர் ஸ்ரீதர் தொடர்ந்து பைத்தந்துறை கிராமத்தில் வனத்துறையின் மூலம் மரக்கன்றுகள் வளர்க்கும் நாற்றாங்கால் தோட்டத்தையும் பார்வையிட்டார்.
அப்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) விஜயகுமார், இணை இயக்குனர் சுந்தரம், வேளாண்மை உதவி இயக்குனர்(தரக்கட்டுப்பாடு) அன்பழகன், சின்னசேலம் வேளாண்மை உதவி இயக்குனர் கலைச்செல்வி, வேளாண்மை அலுவலர் அனுராதா, தாசில்தார் அனந்தசயனன், வருவாய் ஆய்வாளர் சிங்காரவேலு மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story