மழை ஓய்ந்தும் வடியாத வெள்ளம்


மழை ஓய்ந்தும் வடியாத வெள்ளம்
x
தினத்தந்தி 13 Nov 2021 10:36 PM IST (Updated: 13 Nov 2021 10:36 PM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் மழை ஓய்ந்தும் வடியாத வெள்ளத்தால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் அவதி அடைந்துள்ளனர்.

கடலூர், 

தமிழகத்தில் கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்துள்ளது. இதனால் கடலூர் மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி முதல் 10-ந் தேதி வரை தொடர் கனமழை பெய்தது. இதில் கடந்த 8-ந் தேதி முதல் தொடர்ந்து 2 நாட்கள் அடைமழை கொட்டி தீர்த்தது. இந்த கனமழையால் ஆறு, ஓடைகள் மற்றும் நீர்வரத்து வாய்க்கால்களில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
மேலும் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைவெள்ளம் சூழ்ந்தது. இதில் கடலூர், குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பல்வேறு வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

ஓய்ந்த மழை

இந்த நிலையில் மழை ஓய்ந்ததும் மாவட்ட நிர்வாகம் சார்பில் குடியிருப்புகளில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் பணி தொடங்கி நடக்கிறது. ஆனால் மழை ஓய்ந்து 3 நாட்கள் ஆகியும், பல இடங்களில் தேங்கிய மழைநீர் வடியாமல் அப்படியே குளம்போல் நிற்கிறது. இதனால் ஒரு சிலர் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு, அருகில் உள்ள உறவினர் வீடுகளுக்கு சென்று வசித்து வருகின்றனர்.
அந்த வகையில் கடலூர் செம்மண்டலம் வில்வராயநத்தம் பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் இன்னும் வடியாமல் தேங்கி உள்ளது. அந்த நகரில் உள்ள குளம் நிரம்பி வழிவதால், குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீரை வெளியேற்ற முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

சிறுவர் பூங்கா

மேலும் அப்பகுதியில் உள்ள சிறுவர் பூங்கா முழுவதும் தண்ணீர் தேங்கி, குளம் போல் காணப்படுகிறது. இந்த பூங்காவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துப்புரவு பணி மேற்கொண்டும், பாதியிலேயே கைவிடப்பட்டதால் மழைநீர் வெளியேற வழியின்றி தேங்கி நிற்கிறது. இதில் விளையாட்டு உபகரணங்களும் மழைநீரில் மூழ்கி கிடப்பதால் சேதமடைந்து வருகிறது.
இதேபோல் கடலூர் நத்தவெளி சாலையோரம், முத்தையாநகர், ஸ்டேங் வங்கி காலனி, சின்னகங்கணாங்குப்பம், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் வடியாமல், குட்டைபோல் காணப்படுகிறது. தற்போது அந்த மழைநீருடன் கழிவுநீரும் கலந்து வருவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை விரைந்து வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story