மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்- கலெக்டர் வேண்டுகோள்


மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்-  கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 13 Nov 2021 10:58 PM IST (Updated: 13 Nov 2021 10:58 PM IST)
t-max-icont-min-icon

மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருச்செந்தூர்:
மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறப்பு முகாம்

திருச்செந்தூர் செந்தில் முருகன் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் நேற்று வாக்காளர் அட்டைக்கான சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.பின்னர் அவர் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் (அதாவது இன்று) வாக்காளர் அட்டைக்கான சிறப்பு முகாம் நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 611 வாக்காளர் மையங்களிலும் நடக்கிறது. இதில் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களை இணைப்பது, வாக்காளர் அட்டையில் உள்ள திருத்தங்கள், பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நடைபெறும். இம்முகாமினால் சரியான வாக்காளர் பட்டியல் உருவாக்கப்படும்.

பயிர் காப்பீடு

இந்த ஆண்டு நமது மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்துள்ளதையடுத்து விவசாயிகள் விவசாய பணிகளை செய்து வருகிறார்கள். இந்த விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர்களிடம் அடங்கல் சான்று வாங்கி பயிர் காப்பீடு செய்து பயனடைய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வருடம் பருவ மழை வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. இந்த மழையினால் பாதிக்கப்பட்டுள்ள வாழை உள்ளிட்ட விளை நிலங்களில் தேங்கியுள்ள மழை நீரினை வெளியேற்ற வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் தோட்டக்கலைத்துறை மூலம் பயிர்களில் நோய் தாக்காமல் இருக்கவும் நோய் தடுப்பு மருந்து வழங்கி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மீன் பிடிக்க செல்ல வேண்டாம்

தமிழ்நாடு முழுவதும் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று துறை வாரியாகவும், மாவட்ட நிர்வாகம் மூலமும் எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. நமது மாவட்டத்தில் உள்ள 27 கடலோர கிராமங்களிலும் இந்த அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பையும் மீறி காயல்பட்டினம் கொம்புதுறை மீனவர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் கடலுக்குள் சென்றுள்ளனர். இதில் மார்ட்டின் மற்றும் பிலவேந்திரன் என்ற மீனவர்கள் சென்ற படகு காற்றினால் ஏற்பட்ட அலையில் சிக்கி கவிழ்ந்ததில் இரு மீனவர்களும் கடலில் விழுந்தனர். இதில் மார்ட்டின் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பிலவேந்திரன் கடலில் மாயமாகியுள்ளார். அவரை கடலோர காவல் படையினர் மற்றும் மீன்வளத்துறையினர் படகுகளில் தேடி வருகின்றனர். எனவே மறு அறிவிப்பு வரும் வரை கடலோர கிராமங்களில் வசிக்கும் மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீண்டும் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது, திருச்செந்தூர் உதவி கலெக்டர் கோகிலா, தாசில்தார் சுவாமிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகள் மற்றும் 12 ஊரக வளர்ச்சி ஒன்றிய பகுதிகளிலும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. இதற்கான மருத்துவ வாகனங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் செந்தில்ராஜ் கலந்துகொண்டு மருத்துவ வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து டெங்கு நோய் பரப்பும் கொசுக்களின் உற்பத்தியை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு கண்காட்சியையும் அவர் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் சுகாதார பணிகள்  துணை இயக்குநர் பொற்செழியன், மாநகராட்சி நகர்நல அலுவலர் வித்யா மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story