குருப்பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


குருப்பெயர்ச்சியையொட்டி கோவில்களில் சிறப்பு பூஜை திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 13 Nov 2021 6:23 PM GMT (Updated: 13 Nov 2021 6:23 PM GMT)

குருப்பெயர்ச்சியையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை:
குருப்பெயர்ச்சி
குரு பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு நேற்று மாலை இடம்பெயர்ந்தார். இதையொட்டி புதுக்கோட்டையில் சாந்தநாத சாமி, திருவேங்கைவாசல், திருக்கோகர்ணம் பிரகதாம்பாள், மீனாட்சி சுந்தரேஸே்வரர், திருவப்பூர் ஈஸ்வரன் உள்ளிட்ட கோவில்களில் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவேங்கைவாசலில் குரு பகவானான தட்சிணாமூர்த்தி தனிசன்னதியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அலங்காரத்தில் சாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அறந்தாங்கி
அறந்தாங்கி கோட்டை விசாலாட்சி அம்பாள் சமேத விஸ்வநாதர் கோவில் குருபெயர்ச்சியை முன்னிட்டு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.
வடகாடு அருகேயுள்ள மாங்காடு விடங்கேஷ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. 
ஆதனக்கோட்டை அருகே உள்ள குப்பையன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வீரடிவிநாயகர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதையடுத்து வீரடி விநாயகர், குரு பகவானுக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. நடைபெற்றது.
ஆலங்குடி
ஆலங்குடி தர்மசம்வர்த்தி சமேத நாமபுரீஸ்வரர் கோவிலில் குருபகவான் தனிச் சன்னதிகொண்டு அருள்பாலித்து வருகிறார். ஆலங்குடியில் உள்ள இந்த தலம் தமிழ்நாட்டின் இரண்டாவது குருஸ்தலம் எனப் போற்றப்படுகிறது. குருபெயர்ச்சி காண தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்து கலந்துகொண்டனர். குருபகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்கிறார். இந்தப் பெயர்ச்சியால் பலர் கலந்துகொண்டு அர்ச்சனைகள் செய்து வழிபட்டனர். குருபெயர்ச்சியை முன்னிட்டு காலையில் யாகம் வளர்க்கப்பட்டது. பின்னர் குருபகவானுக்கு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. குருபெயர்ச்சி நேரமாகிய மாலை 6 மணி 5 நிமிடத்தில் தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். குருபெயர்ச்சி விழாக்கமிட்டியார் பக்தர்களுக்கு பால், பிஸ்கட், நிலக்கடலைப்பருப்பு ஆகியவற்றைப் பிரசாதமாக வழங்கினார்கள்.
திருவரங்குளத்தில் சுயம்புலிங்க அரங்குளநாதர் சமேத பெரியநாயகி அம்பாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு நவகிரக சன்னதியில் உள்ள குரு பகவானுக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 9 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் கீரனூர் சிவன் கோவிலில் உள்ள குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story