மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா


மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி: கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா
x
தினத்தந்தி 14 Nov 2021 12:24 AM IST (Updated: 14 Nov 2021 12:24 AM IST)
t-max-icont-min-icon

குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆனதையொட்டி கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நேற்று குருப்பெயர்ச்சி விழா நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கரூர்,
குருப்பெயர்ச்சி விழா
குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு நேற்று மாலை 6.21 மணிக்கு இடம்பெயர்ந்ததையொட்டி கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. இதையொட்டி கோவிலில் நவக்கிரக சன்னதியில் குருபகவானுக்கு சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களை முழங்க சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர். 
கொண்டை கடலை மாலை அணிவித்து, பூக்களால் குருபகவான் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நவக்கிரகங்களுக்கும் அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. 
மகாதீபாராதனை
தொடர்ந்து குருபகவானுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் கரூர், திருமாநிலையூர், பசுபதிபாளையம், செங்குந்தபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் கரூர் ஐந்து ரோடு பகுதியில் உள்ள கோடீஸ்வரர் கோவிலில் குருப்பெயர்ச்சியையொட்டி யாகம் நடைபெற்று, குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானை வழிபட்டு சென்றனர்.
சந்தனகாப்பு அலங்காரம்
தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட ஆர்.டி.மலை மீது அமைந்திருக்கும் விராசிலை ஈஸ்வரர் கோவிலில் குருபகவானுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சந்தன காப்பு அலங்காரம் செய்து அதன் பின்னர் மகா தீபம் காட்டப்பட்டது. 
இதேபோல் தோகைமலை மலைமீது அமைந்திருக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், சின்னரெட்டிபட்டி ஆவுடைலிங்கேஸ்வரர் கோவில், சிவாயம் சிவபுரிஸ்வரர் கோவில், தோகைமலை வடக்கு, தெற்கு மார்க்கண்டேயர் கோவில்களில் குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
புன்னைவன நாதர்
புன்னைவன நாதர் கோவிலில் உள்ள குருபகவான் மற்றும் தட்சிணாமூர்த்தி கோவில் வளாகத்தில் அக்னி குண்டம் வைக்கப்பட்டு புரோகிதர்கள் வேத மந்திரங்களை ஓதினார்கள். அதில் யாகங்கள், ஹோமங்கள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து குருபகவான் மற்றும் தட்சிணாமூர்த்திக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து பல்வேறு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு குருபகவான், தட்சிணாமூர்த்தி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Next Story