ரூ.9 ஆயிரம் கோடிக்கான கடன் ஆற்றல் திட்ட அறிக்கை


ரூ.9 ஆயிரம் கோடிக்கான கடன் ஆற்றல் திட்ட அறிக்கை
x
தினத்தந்தி 14 Nov 2021 12:27 AM IST (Updated: 14 Nov 2021 12:27 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டத்தில் 2022-2023ஆம் ஆண்டு ரூ.9 ஆயிரத்து 78 கோடி மதிப்பிலான கடன்ஆற்றல் அறிக்கையை கலெக்டர் மேகநாத ரெட்டி வெளியிட்டார்.

விருதுநகர், 
விருதுநகர் மாவட்டத்தில் 2022-2023-ம் ஆண்டு ரூ.9 ஆயிரத்து 78 கோடி மதிப்பிலான கடன்ஆற்றல் அறிக்கையை கலெக்டர் மேகநாத ரெட்டி வெளியிட்டார்.
வங்கி மேலாளர் கூட்டம் 
விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான வங்கி மேலாளர்கள் கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2022-2023-ம் ஆண்டிற்கான வளம் சார்ந்த கடன் ஆற்றல்  திட்ட அறிக்கையினை கலெக்டர் வெளியிட்டார்.
 அப்போது அவர் கூறியதாவது:- 
தமிழகத்தில் வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி பணியில் முக்கிய பங்கு வகிக்கும் நபார்டு வங்கி விருதுநகர் மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சார்ந்த தகவல் களை சேகரித்து அதன் மூலம் ரூ. 9 ஆயிரத்து 78 கோடியே 70 லட்சம் அளவிற்கு கடன் ஆற்றல் உள்ளது என மதிப்பீடு செய்துள்ளது.
கட்டுமான வசதி 
 விவசாயத்தில் நீண்டகால கடன் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை இத்திட்டம் விளக்குகிறது. இதுபோன்ற கடன் வசதிகள் விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்ற உதவும் என்றும், வேளாண்மையில் எந்திரமயமாக்கல் சொட்டு மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை பயன்படுத்தவும், கால்நடை வளர்ப்பை விவசாயத்தில் ஒரு அங்கமாக செய்திடவும், விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவும்.
இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்களை நிறைவேற்றி மாவட்டம் வளர்ச்சி பெற வங்கிகள், அனைத்து அரசு துறைகளும் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார். 
இக்கூட்டத்தில் பேசிய நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் ராஜா சுரேஷ்வரன் கூறியதாவது:- இந்தகடன்ஆற்றல் திட்ட அறிக்கை பல அரசு துறைகள் வங்கிகள் மற்றும் அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளின் ஆலோசனை மற்றும் புள்ளி விவர அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
கடன் திட்டம் 
 விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கவேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கமாகும். அதனை கருத்தில் கொண்டு இந்த வளம் சார்ந்த கடன்ஆற்றல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையின் உதவியுடன் விருதுநகர் மாவட்டத்திற்கான வருடாந்திர கடன் திட்டம் தயாரிக்கப்படும்.
 இவ்வாறு அவர் கூறினார். 
இதில் முன்னோடி வங்கி மேலாளர் பாண்டி செல்வன் உள்பட  அனைத்து மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர்கள், மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story