வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம்கள்; மாவட்ட பார்வையாளர் நேரில் ஆய்வு


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம்கள்; மாவட்ட பார்வையாளர் நேரில் ஆய்வு
x
தினத்தந்தி 14 Nov 2021 12:30 AM IST (Updated: 14 Nov 2021 12:30 AM IST)
t-max-icont-min-icon

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம்களை மாவட்ட பார்வையாளர் மகேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கரூர்,
சிறப்பு முகாம்கள்
கரூர் மாநகராட்சி குமரன் நடுநிலைப்பள்ளி, பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கடம்பர்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட பணிகள் தொடர்பான சிறப்பு முகாம்களை தமிழ்நாடு சிறு, குறு நடுத்தர தொழில் சிறப்பு செயலாளரும், கரூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளருமான மகேஸ்வரி மற்றும் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 
இதுகுறித்து மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் மகேஸ்வரி கூறியதாவது:- கரூர் மாவட்டத்திலுள்ள கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் (தனி) மற்றும் குளித்தலை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 2022-ம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-ந்தேதி அன்று வெளியிடப்பட்டுள்ளது.
மனுக்கள் அளிக்கலாம்
1.1.2022 அன்று 18 வயது நிறைவடைந்த, வாக்காளர்களாக பதிவு செய்யாத தகுதியுள்ள அனைவரும் வாக்காளர்களாக தங்களை பதிவு செய்து கொள்ளலாம். 1.11.2021 முதல் 30.11.2021 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மற்றும் இடமாற்றம் செய்ய அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அமைவிட அலுவலர், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் ஆகியோரிடம் மனுக்களை அளிக்கலாம். இன்று (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற 27, 28-ந் தேதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைத்து வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இந்த சிறப்பு முகாம்களிலும் வாக்குச்சாவடி அலுவலரிடம் வாக்காளர்கள் தங்களது பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் செய்தல் மற்றும் இடமாற்றம் உள்ளிட்டவை குறித்த மனுக்களை அளிக்கலாம். மேலும் http://www.nvsp.in என்ற இணையதளம் மற்றும் voter helpline என்ற மொபைல் செயலி மூலமாகவும் மனுக்களை அளிக்கலாம். எனவே, தகுதியுடைய வாக்காளர்கள் அனைவரும் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும், நீக்க வேண்டியவர்களை நீக்க இந்த வாய்ப்பை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தோகைமலை, லாலாபேட்டை
தோகைமலை ஒன்றியத்திற்குட்பட்ட 20 ஊராட்சிகளிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், சரிபார்த்தல் ஆகியவை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் நடைபெற்றது. அதைதொடர்ந்து 18 வயது நிரம்பிய ஆண், பெண் ஆகியோருக்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டது. இறந்தவர்களின் பெயர்கள் மற்றும் வெளியூர்களில் குடிபெயர்ந்தவர்களின் பெயரும் நீக்கம் செய்யப்பட்டன.  இதேபோல் கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட லாலாபேட்டையில் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் குறித்து சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் குறித்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினர்.
நொய்யல்
நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஈவேரா பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி, புகளூர் அரசு நடுநிலைப்பள்ளி, தவிட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, குந்தாணிபாளையம் அரசு ஆரம்ப பள்ளி, கூலக்கவுண்டனூர் அரசு தொடக்கப்பள்ளி, புகளூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் வாக்காளர் அட்டை சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமில் வாக்காளர் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், முகவரி மாற்றம், பெயர் மாற்றம் சரிபார்ப்பு போன்றவை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் துறையினர் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து சம்பந்தப்பட்ட படிவங்களை பெற்றுக்கொண்டனர்.
 8 லட்சத்து 99 ஆயிரத்து 622 வாக்காளர்கள்
கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 400 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 11 ஆயிரத்து 904 பெண் வாக்காளர்களும், 7 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 14 ஆயிரத்து 311 வாக்காளர்களும், கரூர் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 16 ஆயிரத்து 4 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 28 ஆயிரத்து 904 பெண் வாக்காளர்களும், 20 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 44 ஆயிரத்து 928 வாக்காளர்களும், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 935 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 9 ஆயிரத்து 139 பெண் வாக்காளர்களும், 43 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 13 ஆயிரத்து 117 வாக்காளர்களும், குளித்தலை சட்டமன்ற தொகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 672 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 16 ஆயிரத்து 584 பெண் வாக்காளர்களும், 10 இதர வாக்காளர்களும் என மொத்தம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 266 வாக்காளர்களும் என 4 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 4 லட்சத்து 33 ஆயிரத்து 11 ஆண் வாக்காளர்களும், 4 லட்சத்து 66 ஆயிரத்து 531 பெண் வாக்காளர்களும், 80 இதர வாக்காளர்களும் என கரூர் மாவட்டத்தில் மொத்தம் 8 லட்சத்து 99 ஆயிரத்து 622 வாக்காளர்கள் உள்ளனர்.

Next Story