நீர்நிலைகளில் வேடிக்கை பார்க்க பொதுமக்கள் செல்லக்கூடாது-கலெக்டர் விஷ்ணு எச்சரிக்கை
நெல்லை மாவட்டத்தில் தொடர் மழைக்கு வாய்ப்பு உள்ளதால் நீர் நிலைகளில் வேடிக்கை பார்க்க பொதுமக்கள் செல்லக்கூடாது என்று கலெக்டர் விஷ்ணு எச்சரிக்கை விடுத்துள்ளார்
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் தொடர் மழைக்கு வாய்ப்பு உள்ளதால் நீர் நிலைகளில் வேடிக்கை பார்க்க பொதுமக்கள் செல்லக்கூடாது என்று கலெக்டர் விஷ்ணு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பேட்டி
இதுகுறித்து அவர் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறிஉள்ளது. எனவே பொது மக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்க செல்ல வேண்டாம். மேலும் ‘செல்பி’ எடுக்கவும் ஆற்றங்கரை பகுதிக்கு செல்லக்கூடாது.
இதுதவிர நீர்நிலைகள் நிரம்புவதையும், கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதையும் வேடிக்கை பார்க்கவும், அருகில் நின்று செல்பி எடுக்கவும் செல்லக்கூடாது. இந்த நேரத்தில் சுற்றுலா தலங்களுக்கும் செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் 6 அணைகள் உள்ளன. இதில் பாபநாசம் காரையாறு மற்றும் சேர்வலாறு அணைகளில் 94 சதவீதமும், மணிமுத்தாறு அணையில் 50 சதவீதமும், கொடுமுடியாறு அணையில் 93 சதவீதமும் தண்ணீர் நிரம்பி உள்ளது.
தாமிரபரணி ஆற்றிலும், நம்பியாற்றிலும் தண்ணீர் அதிகமாக வருவதால் தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு செல்ல வேண்டும்.
அவசர உதவி எண்
மாவட்டத்தில் பயிர்கள் பாதிப்பு குறித்து வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறையினர் மூலம் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. ரோடுகள் மழைக்காலம் முடிந்த உடன் சீரமைக்கப்படும். தற்போது தாழ்வான பகுதியில் தேங்கி இருக்கும் தண்ணீர் உள்ளாட்சி துறையினர் மூலம் சரி செய்யப்பட்டு வருகிறது.
கிராம பகுதியில் டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மழைக்காலத்தில் தண்ணீரை காய்ச்சி குடிக்க வேண்டும். மழைக்கால அவசர உதவிக்கு நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறையை கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0462-2501012, 2501070 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story