பிரதம மந்திரி வீடு கட்டும் திட்ட பயனாளியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் கைது
வாசுதேவநல்லூர் அருகே பிரதம மந்திரி வீடு கட்டும் திட்ட பயனாளியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
வாசுதேவநல்லூர்:
வாசுதேவநல்லூர் அருகே பிரதம மந்திரி வீடு கட்டும் திட்ட பயனாளியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
கூலி தொழிலாளி
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் யூனியன் சங்குபுரம் பஞ்சாயத்து பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 62), கூலி தொழிலாளி. இவர் மத்திய அரசின் பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் வீடு கட்டுவதற்காக, பஞ்சாயத்து அலுவலகத்தில் மனு வழங்கினார்.
இதையடுத்து பாண்டிக்கு புதிய வீடு கட்டுவதற்கான ஆணை வந்துள்ளதாக பஞ்சாயத்து அலுவலகம் மூலம் தெரிவிக்கப்பட்டது.
வீடு கட்ட ஆணை வழங்க...
தொடர்ந்து பயனாளி பாண்டியை தொடர்பு கொண்ட சங்குபுரம் ஊராட்சி செயலர் முருகையா, புதிய வீடு கட்டுவதற்கான ஆணையை ஆய்வு செய்து உறுதிப்படுத்தி வழங்குவதற்கு தனக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் அதில், முதல் தவணையாக ரூ.20 ஆயிரத்தை வீடு கட்டுவதற்கான ஆணை வழங்குவதற்கு முன்பாகவும், பின்னர் வீடு கட்டும்போது 2-வது தவணையாக ரூ.10 ஆயிரத்தையும் தர வேண்டும் என்று தெரிவித்தார்.
கையும் களவுமாக கைது
இதையடுத்து லஞ்சம் வழங்க விரும்பாத பாண்டி, இதுகுறித்து நெல்லை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுறுத்தலின்படி, நேற்று காலையில் ரசாயனம் தடவிய ரூ.20 ஆயிரத்தை ஊராட்சி செயலர் முருகையாவிடம் வழங்குவதற்காக அப்பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு பாண்டி சென்றார்.
அங்கு வீட்டில் இருந்த முருகையாவிடம் ரூ.20 ஆயிரத்தை பாண்டி வழங்கினார்.
அப்போது அங்கு மறைந்து இருந்த நெல்லை லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மெக்கலரின் எஸ்கால், இன்ஸ்பெக்டர் ராபின் ஞானசிங், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சீதாராமன் மற்றும் போலீசார் விரைந்து சென்று, முருகையாவை கையும் களவுமாக பிடித்து அதிரடியாக கைது செய்தனர்.
பஞ்சாயத்து அலுவலகத்தில் சோதனை
தொடர்ந்து சங்குபுரம் பஞ்சாயத்து அலுவலகத்துக்கும் சென்று, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.
வாசுதேவநல்லூர் அருகே பிரதம மந்திரி வீடு கட்டும் திட்ட பயனாளியிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story