விபத்தை ஏற்படுத்திய டிரைவரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை


விபத்தை ஏற்படுத்திய டிரைவரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 14 Nov 2021 1:18 AM IST (Updated: 14 Nov 2021 1:18 AM IST)
t-max-icont-min-icon

விபத்தை ஏற்படுத்திய டிரைவரிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை

சேலம், நவ.14-
ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் விபத்தில் பலியான வழக்கு தொடர்பாக அவருடைய மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை பிடித்து தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் டிரைவர்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாட்டில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட், பங்களா உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி அங்கு இரவு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை ஒரு கும்பல் கொலை செய்ததுடன் எஸ்டேட்டிற்குள் நுழைந்து பொருட்கள் மற்றும் ஆவணங்களை கொள்ளையடித்து சென்றது.
இந்த சம்பவம் தொடர்பாக ஜெயலலிதாவின் கார் டிரைவரான சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியை சேர்ந்த கனகராஜ் உள்பட பலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனிடையே அந்த சம்பவம் நடந்த சில நாட்களிலேயே சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சந்தனகிரி என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் டிரைவர் கனகராஜ் உயிரிழந்தார்.
டிரைவரின் அண்ணன் கைது
இதையடுத்து, ஆத்தூர் போலீசார் மோட்டார் சைக்கிளில் சென்ற கனகராஜ் மீது கார் மோதியதில் அவர் இறந்ததாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனிடையே கனகராஜ் சாவில் மர்மம் இருப்பதாக அவருடைய உறவினர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பான விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக தடயங்களை அழித்ததாக விபத்தில் பலியான கனகராஜின் அண்ணன் தனபால் மற்றும் அவருடைய நெருங்கிய உறவினரான ஆத்தூரை சேர்ந்த ரமேஷ் ஆகியோரை கடந்த மாதம் போலீசார் கைது செய்தனர்.
ரகசிய இடத்தில் விசாரணை
இந்த நிலையில் கார் டிரைவர் கனகராஜ் விபத்து தொடர்பான வழக்கில் மீண்டும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் தலைமையில் தனிப்படை போலீசார் இந்த வழக்கின் ஆரம்ப நிலையில் இருந்தே தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கனகராஜின் மோட்டார் சைக்கிள் மீது மோதிய காரில் வந்தவர்களான பெரம்பலூரை சேர்ந்த நல்லதம்பி குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதைத்தொடர்ந்து அந்த காரை ஓட்டி வந்த டிரைவரான தம்மம்பட்டியை சேர்ந்த ரபீக் (வயது 23) என்பவரை நேற்று காலை 7 மணிக்கு தனிப்படை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போன் ஆய்வு
இந்த விசாரணையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் நேரடியாக இறங்கி உள்ளார். ரபீக்கிடம் இந்த விபத்து சம்பவம் நடந்தது எப்படி?, என்பன உள்ளிட்ட விவரங்களை போலீசார் விசாரித்து பதிவு செய்து வருகின்றனர். மேலும், விபத்து நடந்த பிறகு அவர் பயன்படுத்திய பழைய செல்போன் எண்ணை, ரபீக் மாற்றியதற்கான காரணம் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
மேலும் அவருடைய பழைய செல்போன் எண் மற்றும் புதிய எண்ணை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதில் அந்த செல்போன் எண்களுக்கு பேசியவர்களின் விவரங்களையும் மற்றும் விபத்து நடந்த மாதத்தில் அவர் யார், யாரிடம் பேசி உள்ளார், அவரிடம் பேசியவர்கள் யார்? என்பன உள்ளிட்ட பல்வேறு விவரங்களையும் விசாரித்து வருகின்றனர்.
விசாரணை முடிவில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் மரணம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளிவரலாம் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story