ராட்சத பாறைகள் வெடி வைத்து அகற்றம்


ராட்சத பாறைகள் வெடி வைத்து அகற்றம்
x
தினத்தந்தி 14 Nov 2021 1:19 AM IST (Updated: 14 Nov 2021 1:19 AM IST)
t-max-icont-min-icon

ராட்சத பாறைகள் வெடி வைத்து அகற்றம்

ஏற்காடு, நவ.14-
ஏற்காடு மலைப்பாதையில் விழுந்த ராட்சத பாறைகள் வெடி வைத்து அகற்றப்பட்டன. இதன் காரணமாக 8½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பாறைகள் விழுந்தன
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் 60 அடி பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. மண் சரிவும் ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
இது குறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று முன்தினம் இரவே சிறு பாறைகள் மற்றும் மண்ணை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி தற்காலிகமாக போக்குவரத்தை சீர் செய்தனர். 
வெடி வைத்து அகற்றம்
இதைத்தொடர்ந்து நேற்று காலை சுமார் 7 மணி அளவில் ராட்சத பாறைகளை அகற்றும் பணி தொடங்கியது. கம்பரசர் எந்திரங்கள் கொண்டு பாறைகளில் துளையிடப்பட்டு, உடைத்து அகற்ற முயன்றனர். மேலும் பொக்லைன் எந்திரங்கள் வரவழைக்கப்பட்டு அகற்ற முயற்சி நடந்தது. ஆனால் பாறைகள் அதிக எடை கொண்டதாக இருந்ததால் அதனை அகற்ற முடியவில்லை.
இதன் பின்னர் காலை 10 மணி அளவில் பாறைகளை வெடி வைத்து அகற்ற முடிவு செய்யப்பட்டது. இதற்காக தடுப்புகள் வைத்து போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் 2 ராட்சத பாறைகளையும் வெடி வைத்து தகர்க்கும் பணி தொடங்கியது. இதற்காக பாறைகளில் துளையிடப்பட்டு அதில் வெடிமருந்து நிரப்பப்பட்டன. இதையடுத்து அவை சிறிய, சிறிய பாறைகளாக வெடித்து சிதறின. பின்னர் சிதறிய கற்கள் பொக்லைன் எந்திரங்கள் கொண்டு அகற்றப்பட்டன. 
போக்குவரத்துக்கு அனுமதி
இதைத்தொடர்ந்து மாலை 6.30 மணி அளவில் மீண்டும் மலைப்பாதையில் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. பாறைகள் வெடி வைத்து அகற்றும் பணிக்காக சேலம்-ஏற்காடு மலைப்பாதையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தன. ராட்சத பாறைகள் அகற்றும் பணியால் 8½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story