தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. இதையொட்டி, அணைகளில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நெல்லை:
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. இதையொட்டி, அணைகளில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதால் தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
பரவலாக மழை
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் மழை விட்டு, விட்டு பெய்து கொண்டே இருந்தது. பிற்பகலில் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. இரவிலும் மழை பெய்தது.
இதனால் நெல்லை, பாளையங்கோட்டை பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கியது. அம்பை, வள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்தது.
சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல தடை
இதையொட்டி வள்ளியூர் கல்வி மாவட்ட பகுதிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை அளித்து கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். இதனால் மற்ற பகுதிகளில் நேற்று பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டன.
பாபநாசம் காரையாறு அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதையொட்டி, சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல தற்சமயம் அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அனுமன் நதியில் வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக பணகுடி குத்தரபாஞ்சான் அருவியில் காட்டாற்று வெள்ளம் சீறிப்பாய்ந்து ஓடியது. இதனால் அனுமன் நதியிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பணகுடி மெயின் ரோட்டில் உள்ள பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றது. மேலும் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் தண்ணீர் புகுந்தது.
இதுதவிர ராமலிங்கசுவாமி கோவில் தெப்பகுளம் தண்ணீரில் மூழ்கியது. கோவில் வளாகத்தையும் தண்ணீர் சூழ்ந்தது. பணகுடி அருகே கொமந்தான் கிராமத்தில் உள்ள பாலம் தண்ணீரில் மூழ்கியதாலும், புஷ்பவனம், சைதம்மாள்புரம் ஆகிய இடங்களில் ஓடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதாலும் மக்கள் கிராமங்களை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்பட்டனர். ஆவரைகுளம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால், அதை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கலெக்டர் பார்வையிட்டார்
காவல்கிணறு இஸ்ரோ மைய வளாகத்தில் இருந்து மழைநீர் வெளியேறி 4 வழிச்சாலையில் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கும் வடிகால் ஏற்படுத்தி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. வள்ளியூர் நரிக்குறவ காலனி அருகே உள்ள தேவர்குளம் நிரம்பி தண்ணீர் வெளியேறி காலனியில் உள்ள வீடுகளை சூழ்ந்தது. பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக வெளியேற்றி சமத்துவபுரத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்கவைத்தனர். மேலும் குளத்துக்கு வரும் தண்ணீர் வேறு பக்கம் திருப்பி விடப்பட்டது.
மழைவெள்ளம் பாதித்த பகுதிகளில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு, ஞானதிரவியம் எம்.பி., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், சேரன்மாதேவி உதவி கலெக்டர் சிந்து, தாசில்தார் ஜேசுராஜன், யூனியன் தலைவர் சேவியர் செல்வராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சகாயசாந்தி உள்ளிட்டோர் பார்வையிட்டு உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு
நெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகள் உச்ச நீர்மட்டத்தை அடைந்துள்ளது. குறிப்பாக 143 அடி உயரம் கொண்ட பாபநாசம் காரையாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 135.85 அடியாக இருந்தது. நேற்று காலை நிலவரப்படி மேலும் 2.55 அடி உயர்ந்து 138.40 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. கனமழை காரணமாக மாலையில் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்தது.
இதனால் அணையின் பாதுகாப்பு கருதி, வினாடிக்கு 10 ஆயிரத்து 100 கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. மேலும் கடனாநதி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்ததால், அணையில் இருந்து 950 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த இரு அணைகளில் இருந்து வரும் 11 ஆயிரத்து 50 கனஅடி தண்ணீரும், காட்டாற்று வெள்ளமும் கலந்து வருவதால் தாமிரபரணியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.
சேர்வலாறு
இதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் 5 அடி உயர்ந்து 145.44 அடியாக உள்ளது. மணிமுத்தாறு அணை நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து 86.25 அடியாக உள்ளது. அணைக்கு 235 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து பாசனத்துக்காக பெரிய கால்வாயில் 10 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
கொடுமுடியாறு அணை நீர்மட்டம் 50.50 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை தொடர்ந்து 1,200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
தென்காசி அணைகள்
தென்காசி மாவட்டத்தில் உள்ள ராமநதி அணை நீர்மட்டம் 80.50 அடியாக உள்ளது. கருப்பா நதி அணை நீர்மட்டம் 68.24 அடியாக உள்ளது. அணைக்கு வருகிற 70 கன அடி தண்ணீர் அப்படியே உபரிநீராக வெளியேற்றப்படுகிறது.
குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது. அடவிநயினார் அணை நீர்மட்டம் 124 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 95 கன அடியாகவும், வெளியேற்றம் 35 கனஅடியாகவும் உள்ளது.
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:-
பாபநாசம்-10, சேர்வலாறு-3, மணிமுத்தாறு-7, நம்பியாறு-12, கொடுமுடியாறு-17, அம்பை-3, சேரன்மாதேவி -2, நாங்குநேரி-7, ராதாபுரம்-39, களக்காடு-12, மூலைக்கரைப்பட்டி-5, பாளையங்கோட்டை-5, நெல்லை-2. கடனாநதி அணை-9, கருப்பா நதி-1, குண்டாறு-2, அடவிநயினார்-32, செங்கோட்டை-1, தென்காசி-10, சிவகிரி -2.
Related Tags :
Next Story