கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா
கோவில்களில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது.
அரியலூர்:
குருப்பெயர்ச்சி
நவகிரகங்களில் ஒன்றான குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு நேற்று மாலை பெயர்ச்சி அடைந்தார். இதை முன்னிட்டு அரியலூர் பாலதண்டாயுதபாணி கோவிலில் நடைபெற்ற குருபெயர்ச்சி விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் பால், பன்னீர், இளநீர், யாகசாலை பூஜை பொருட்களை காணிக்கையாக செலுத்தினார்கள். நேற்று மாலை யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் மஞ்சளாடை அணிந்து வழிபட்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அரியலூரில் உள்ள கைலாசநாதர் கோவிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டு, கலசங்களில் இருந்த நீரை கொண்டு தட்சிணாமூர்த்திக்கும், நவக்கிரகங்களுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. மேலும் சக்தி விநாயகர் கோவில், ஐந்து முக விநாயகர் கோவில்களிலும் குருப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. இதில் நவக்கிரகங்களில் வீற்றிருக்கும் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
ஆண்டிமடம், ஜெயங்கொண்டம்
ஆண்டிமடம் அருகே திருக்களப்பூரில் உள்ள சிவகாமி அம்மன் உடனுறை திருக்கோடி வனத்தீசுவரர் கோவிலில் சுவாமி, அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தொடர்ந்து குருபகவானுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஆண்டிமடம்-விளந்தை அறம் வளர்த்த நாயகி உடனுறை மேல அகத்தீஸ்வரர் கோவிலில் நடந்த விழாவில் சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார தெய்வங்களை தொடர்ந்து குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் தட்சிணாமூர்திக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
ஜெயங்கொண்டத்தில் கழுமலை நாதர், சென்னீஸ்வரர் உள்ளிட்ட பல்வேறு சிவன் கோவில்களில் சுவாமி, அம்பாளை தொடர்ந்து நவக்கிரக சன்னதியில் உள்ள குருபகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை மாலை அணிவிக்கப்பட்டு, குரு காயத்ரி மந்திரங்களை சிவாச்சாரியார்கள் அர்ச்சனை செய்து முடிவில் மகா தீபாராதனை காட்டினர். மேலும் திருஞானசம்பந்த பெருமான் அருளிச்செய்த கோளறு திருப்பதிகத்தை பக்தர்கள் பாடி குருபகவானை வழிபட்டனர்.
தா.பழூர்
தா.பழூரில் உள்ள விசாலாட்சி அம்மன் உடனுறை விஸ்வநாதர் கோவிலில் சுவாமி, அம்பாள், குரு தட்சிணாமூர்த்தி, நவக்கிரக சன்னதியில் உள்ள குரு பகவான் ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. குரு தட்சிணாமூர்த்திக்கு விபூதி அலங்காரம் செய்யப்பட்டது. சுவாமி, அம்பாள், குருபகவானுக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் செய்யப்பட்டன. குரு பகவானுக்கு மகா தீபாராதனை, மங்கள ஆரத்தி நடைபெற்றது. இதேபோல் நாயகனைப்பிரியாள் மார்க்கசகாயேஸ்வரர் கோவில், கோடாலிகருப்பூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. கோவில்களில் நடந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
Related Tags :
Next Story