போலீஸ் அதிகாரி அலுவலகத்தை பெற்றோர்கள் முற்றுகை


போலீஸ் அதிகாரி அலுவலகத்தை பெற்றோர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 14 Nov 2021 1:28 AM IST (Updated: 14 Nov 2021 1:28 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் அதிகாரி அலுவலகத்தை பெற்றோர்கள் முற்றுகையிட்டனர்.

ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தா.பழூர் ரோட்டில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளிக்கு ஜெயங்கொண்டம், தா.பழூர், ஆண்டிமடம், மீன்சுருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவிகள் சைக்கிள் மற்றும் பஸ் மூலம் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் அந்த பள்ளி வளாகத்திற்கு முன்பாக பழக்கடைகள், இளநீர் கடைகள், பழச்சாறு கடைகள், பூக்கடைகள் போன்ற தரைக்கடைகள் உள்ளன. மேலும் பள்ளி முன்பு அசுத்தமான செயல்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பள்ளி மாணவிகளுக்கும், பள்ளிக்கு அருகே உள்ள மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் இந்த பள்ளி எதிரே போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் உள்ளதால் விபத்து ஏற்படும் வாகனங்கள், மணல் கடத்தி பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் பள்ளி வளாகத்தையொட்டி நிறுத்தப்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே பள்ளி வளாகத்திற்கு முன்பாக உள்ள தரைக்கடைகள் மற்றும் வாகனங்களை அகற்ற வேண்டும், தரைக்கடை நடத்துபவர்களுக்கு மாற்று இடம் அமைத்து கொடுக்க வேண்டும் என்று பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும், மாணவிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர். மேலும் இதுகுறித்து கலெக்டர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் ஏராளமானவர்கள் திரண்டு, போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு, பள்ளி முன்பு உள்ள தரைக்கடைகள், ஆக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் உள்ளிட்டவைகளை அப்புறப்படுத்தி, மாணவிகளை பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story