மேம்பால நடைபாதையில் திரிந்த ராட்சத முதலை
அணைக்கரை கொள்ளிடம் மேம்பால நடைபாதையில் திரிந்த ராட்சத முதலையை பொதுமக்கள் பிடித்து ஆற்றில் விட்டனர்.
திருப்பனந்தாள்;
அணைக்கரை கொள்ளிடம் மேம்பால நடைபாதையில் திரிந்த ராட்சத முதலையை பொதுமக்கள் பிடித்து ஆற்றில் விட்டனர்.
கொள்ளிடம் ஆற்றுப்பாலம்
கும்பகோணம்- சென்னை சாலையில் 185 ஆண்டுகள் பழமையான அணைக்கரை கொள்ளிடம் ஆற்றுப்பாலம் உள்ளது. காவிரி, கொள்ளிடம் ஆகிய 2 ஆறுகளுக்குள் அணைக்கரை பகுதி உள்ளதால் இந்த பகுதி, தீவுபோல் காட்சியளிக்கும். இப்பாலம் பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் ஏராளமான முதலைகள் உள்ளன.
வெள்ள பாதிப்பு
ஆண்டு தோறும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் போது இந்த முதலைகள் பாசன வாய்க்கால்கள் வழியாக இளநாங்கூர், செட்டிமேடு, நாஞ்சலூர், பழைய கொள்ளிடம், வடக்கு ராஜன் பாசன வாய்க்கால், மேலப்பருத்திக்குடி, வேளக்குடி, அகரநல்லூர், வல்லம்படுகை, கடவாச்சேரி, ஜெயங்கொண்டபட்டினம், பிச்சாவரம் உள்ளிட்ட ஆற்றங்கரையோர கிராம நீர்நிலைகளில் தங்கி விடுகின்றன.இந்த முதலைகள், அந்த பகுதியில் ஆற்றில் இறங்கும் பொது மக்கள் மற்றும் கால்நடைகளை அவ்வப்போது கடித்து இழுத்துச் செல்லும் நிகழ்வுகளும் நடக்கிறது. ஆற்றில் வெள்ள பாதிப்பு ஏற்படும் போது, அங்கிருந்து முதலைகள் வெளியேறி மீண்டும் ஊருக்குள் வந்து விடுவதாகவும் மக்கள் கூறுகிறார்கள்.
ஆற்றில் விடப்பட்ட முதலை
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு அணைக்கரை பாலத்தில் மக்கள் நடந்து செல்லும் பகுதியில் சுமார் 7அடி நீளமும் 100 கிலோ எடையும் கொண்ட ராட்சத முதலை சர்வ சாதாரணமாக ஊர்ந்து சென்றது. இதைக்கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் முதலை யாருக்கும் எந்த வித இடையூறையும் விளைவிக்காமல் அமைதியாக சென்று கொண்டிருந்தது.
அப்போது சிலர் அச்சமின்றி முதலையை நெருங்கி முதலையின் மீது கயிற்றை வீசி முதலையை லாவகமாக பிடித்தனர். பின்னர் முதலையை அந்த பகுதியில் இருந்து மெதுவாக நகர்த்தி கொள்ளிடம் ஆற்றில் இறக்கி விட்டனர். ஆற்றில் விடப்பட்ட முதலை அந்த பகுதியில் இருந்து நீந்தி சென்றது. இதன் பிறகு மக்கள் நிம்மதி அடைந்தனர்.
Related Tags :
Next Story