பெங்களூருவில் மனித உரிமை ஆர்வலர் நடுரோட்டில் படுகொலை
பெங்களூருவில் பட்டப்பகலில் நடுரோட்டில் மனித உரிமை ஆர்வலர் படுகொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் நடந்து உள்ளது.
பெங்களூரு:
மனித உரிமை பாதுகாப்பு ஆர்வலர்
பெங்களூரு பானசாவடி அருகே ராமசாமிபாளையாவில் வசித்து வந்தவர் ஸ்ரீதர்(வயது 35). இவர் துணி வியாபாரம் செய்து வந்தார். மேலும் மனித உரிமை பாதுகாப்பு ஆர்வலர் மற்றும் ஊழல் இல்லா அமைப்பின் துணை தலைவராகவும் அவர் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதியம் ஸ்ரீதர் தனது காரில் கோவிந்தபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நாகவாரா மெயின் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது ஸ்ரீதர் சென்ற காரை பின்தொடர்ந்து 4 பேர் பயங்கர ஆயுதங்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்தனர். இதனை கவனித்த ஸ்ரீதர் காரை நிறுத்தி கீழே இறங்கினார்.
அப்போது 4 பேரும் தாங்கள் கையில் வைத்திருந்த கத்தி, அரிவாளால் ஸ்ரீதரை தாக்கினர். இதனால் அவர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனாலும் அவரை 4 பேரும் விடாமல் துரத்தி சென்று கத்தி, அரிவாளால் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த வெட்டு காயம் அடைந்த ஸ்ரீதர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். ஸ்ரீதர் இறந்ததை உறுதி செய்த 4 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர்.
2 தனிப்படைகள்
பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவத்தை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த கொலை சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு கோவிந்தபுரா போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் கொலையான ஸ்ரீதரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஸ்ரீதரை கொலை செய்தது யார், என்ன காரணத்திற்காக கொலை நடந்தது என்பது தெரியவில்லை.
முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இந்த கொலை சம்பவம் குறித்து கோவிந்தபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் சரணப்பா உத்தரவிட்டு உள்ளார்.
Related Tags :
Next Story