திருமணம் நிச்சயமான 12 நாளில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
உப்பள்ளியில் திருமணம் நிச்சயமான 12 நாளில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். வருங்கால கணவரின் கொடுமையால் இந்த விபரீதம் நடந்துள்ளது.
பெங்களூரு:
திருமண நிச்சயத்தார்த்தம்
தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் அசோக் நகர் போலீஸ் நிலைய பகுதியில் வசித்து வந்தவர் பவித்ரா (வயது 25). இவருக்கும் ஹாவேரி மாவட்டத்தை சேர்ந்த அபினந்தன் என்பவருக்கும் இருவீட்டு பெற்றோரும் திருமணம் பேசி முடிவு செய்திருந்தனர். அதன்படி கடந்த 1-ந்தேதி இருவருக்கும் திருமண நிச்சயத்தார்த்தம் முடிந்தது.
இதையடுத்து இருவரும் திருமண போட்டோ ஷூட் நடத்த முடிவு செய்தனர். அதன்படி கடந்த வாரம் இருவரும் உத்தரகன்னடா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமான தண்டேலியில் போட்டோ ஷூட் நடத்தினர்.
தற்கொலை
அப்போது அபினந்தன், பவித்ராவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் இதை சற்றும் எதிர்பாராத பவித்ரா, அபினந்தனை திட்டியுள்ளார். இதனால் அபினந்தன் பவித்ராவுடன் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கடுமையாக அவர் திட்டியுள்ளார். மேலும் வீடு திரும்பிய பிறகும் பவித்ராவை செல்போனில் தொடர்பு கொண்டு தகராறு செய்து வந்ததுடன், கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பவித்ரா மனம் உடைந்த நிலையில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினமும் பவித்ராவுடன் அபினந்தன் தகராறு செய்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த பவித்ரா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். நேற்று காலை தங்களது மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு பெற்றோர் கதறி துடித்தனர்.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அசோக்நகர் போலீசார் விரைந்து வந்து தற்கொலை செய்த பவித்ரா உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக உப்பள்ளி கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், சில்மிஷத்தில் ஈடுபட்ட அபினந்தனை பவித்ரா திட்டியதால், அவர் பவித்ராவை கொடுமைப்படுத்தியதும், அதனால் பவித்ரா தற்கொலை செய்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக பவித்ராவின் பெற்றோர், அபினந்தன் மீது அசோக் நகர் போலீசில் புகார் அளித்தனர்.
பெரும் சோகம்
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமண நிச்சயதார்த்தம் முடிந்த 12 நாளில் புதுப்பெண் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story