குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் சாலைமறியல்


குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 14 Nov 2021 3:52 AM IST (Updated: 14 Nov 2021 3:52 AM IST)
t-max-icont-min-icon

வௌ்ளமடத்தில் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆரல்வாய்மொழி, 
வௌ்ளமடத்தில் குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கால்வாயில் வெள்ளப்பெருக்கு
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் சாலையெங்கும் வெள்ளம் ஆறாக ஓடுகிறது. கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையை கடந்து ஊருக்குள் புகுந்து மிகுந்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. 
வெள்ளமடம் கீழத்தெரு குடியிருப்பு பகுதியில் நாஞ்சில் புத்தனாறுகால்வாய் தண்ணீர் புகுந்து தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் தவிக்கின்றனர். 
சாலை மறியல்
குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்ததை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வெள்ளமடத்தில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, புத்தனாறுகால்வாயில் தண்ணீர் செல்வதற்காக 3 மதகுகள் உள்ளன. இவற்றில் தற்போது ஒரு மதகு திறக்கப்படாமல் உள்ளது. இதனால்தான் வெள்ளம் செல்ல முடியாமல் குடியிருப்பு பகுதியில் புகுந்தது, என்றனர்.
பொதுமக்களிடம் சகாயநகர் பஞ்சாயத்து தலைவர் மகேஷ் ஏஞ்சல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் ¾  மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story