கடந்த 3 நாட்களில் அம்மா உணவகங்களில் 7½ லட்சம் பேர் சாப்பிட்டனர்
சென்னையில் கடந்த 3 நாட்களில் 7½ லட்சம் பேர் அம்மா உணவகங்களில் இலவசமாக சாப்பிட்டுள்ளனர். அதன்படி 7½ லட்சம் இட்லி தயாரித்து வழங்கப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னையில் பெய்த கனமழையால் பல குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளத்தால், பலர் உணவு கிடைக்காமலும், தங்க இடம் இல்லாமலும் தவித்தனர்.
இதையடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தரமான உணவு வினியோகிக்க பெருநகர சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது. இதற்காக ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள சமுதாய நலக்கூடங்களில் மொத்தமாக உணவுகளை சமைத்து, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சென்று மாநகராட்சி ஊழியர்கள் உணவுகளை வழங்கினர். இதுதவிர அம்மா உணவகங்கள் மூலமாகவும் மழை பாதிப்பு முடியும் வரை இலவசமாக உணவு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள 403 அம்மா உணவகங்களில் கடந்த 10-ந் தேதி முதல் இலவசமாக 3 வேளையும் தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி காலையில் இட்லி, பொங்கலும், மதியம் சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், கருவேப்பிலை சாதம், தயிர் சாதமும், இரவு சப்பாத்தி, புளி சாதம், தக்காளி சாதமும் இலவசமாக அம்மா உணவகங்களில் 3 வேளையும் அந்தந்த பகுதிகளில் உள்ள ஏழை, எளிய, ஆதரவற்றோர், கூலி தொழிலாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் வயிறாற சாப்பிடும் வகையில் தொடங்கப்பட்ட அம்மா உணவகம், கடந்த சில நாட்களாக வெறிச்சோடி காணப்பட்ட நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இலவசமாக 3 வேளையும் உணவு வழங்கப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து அம்மா உணவகம் கடந்த 3 நாட்களாக களைக்கட்டி வருகிறது.
தினமும் ஆயிரக்கணக்கானோர் கூடுவதால் அனைத்து அம்மா உணவகங்களும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. அந்தவகையில் கடந்த 3 நாட்களில் மட்டும் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் 7 லட்சத்து 69 ஆயிரத்து 949 பேர் இலவசமாக வயிறாற சாப்பிட்டுள்ளனர்.
அதன்படி கடந்த 10-ந் தேதி 2 லட்சத்து 32 ஆயிரத்து 360 பேரும், 11-ந் தேதி 2 லட்சத்து 58 ஆயிரத்து 373 பேரும், 12-ந் தேதி 2 லட்சத்து 79 ஆயிரத்து 216 பேரும் பயனடைந்துள்ளனர். இதில் கடந்த 3 நாட்களில் 7 லட்சத்து 60 ஆயிரத்து 881 இட்லியும், 80 ஆயிரத்து 430 பொங்கலும் அம்மா உணவக ஊழியர்கள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.
Related Tags :
Next Story