கலவையில் பிளேடால் கழுத்தை அறுத்து முறுக்கு வியாபாரி தற்கொலை


கலவையில் பிளேடால் கழுத்தை அறுத்து முறுக்கு வியாபாரி தற்கொலை
x
தினத்தந்தி 14 Nov 2021 6:41 PM IST (Updated: 14 Nov 2021 6:41 PM IST)
t-max-icont-min-icon

கலவையில் முறுக்கு வியாபாரி பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டாா்.

கலவை

கலவையில் முறுக்கு வியாபாரி பிளேடால் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டாா். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

முறுக்கு வியாபாரி

ராணிப்பேட்டை மாவட்டம் கலவையை அடுத்த டி.புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 40), முறுக்கு வியாபாரி. இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி கோவையிலும், 2-வது மனைவி குமாருடன் கலவையிலும் உள்ளனர். ஏழமையான குடும்பத்தைச் சேர்ந்த குமார் கலவையில் தனது 2-வது மனைவி மற்றும் 3 பிள்ளைகளுடன் வசித்து வந்தார்.

அவர்கள் அனைவரும் வீட்டில் முறுக்கு, வடை, அதிரசம், சோமாஸ் ஆகியவற்றை செய்து விற்பனை செய்து, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் குடும்பம் நடத்தி வந்தனர். குமாருக்கு சக்கரை நோய் இருந்தது. அதன் பாதிப்பால் கால் விரல்கள் பாதிப்படைந்து அகற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. அடிக்கடி மதுபானம் குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததால் அவருக்கும், மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. 

கழுத்தை அறுத்து  தற்கொலை

அதேபோல் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வீட்டில் தகராறு ஏற்பட்டது. அதில் குமார் மனவேதனை அடைந்தார். நேற்று காலை குமார் கலவை பெரிய ஏரிக்கரை அருகில் சென்று, மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அமர்ந்து மதுபானம் குடித்துள்ளார். 
போதை தலைக்கேறியதும் தான் வைத்திருந்த பிளேடால் கழுத்தை தாறுமாறாக அறுத்துக் கொண்டார். அத்துடன் தனது கை, வயிறு ஆகியவற்றிலும் பிளேடால் அறுத்துத் தற்கொலை செய்து கொண்டார். 

இதுபற்றி தகவல் அறிந்ததும் கலவை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணமூர்த்தி, பிரபாகரன், தடய அறிவியல் நிபுணர் ஜோசப் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, குமாரின் உடலை கைப்பற்றி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story