‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 14 Nov 2021 9:15 PM IST (Updated: 14 Nov 2021 9:15 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

திண்டுக்கல்:
சாக்கடை கால்வாயில் அடைப்பு 
தேனியை அடுத்த சின்னமனூரில் மார்க்கையன்கோட்டை ரோட்டில் உள்ள சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கியுள்ளது. இதனால் கால்வாயின் ஒரு பகுதி அடைக்கப்பட்டுவிட்டது. இதன் காரணமாக கழிவுநீர் வெளியேற முடியாமல் கால்வாயிலேயே தேங்கி நிற்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முருகன், சின்னமனூர்.
அதிகரிக்கும் தெருநாய்கள் தொல்லை
பழனியை அடுத்த கலிக்கநாயக்கன்பட்டியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலையில் நடந்து செல்லும் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் துரத்திச்சென்று தெருநாய்கள் கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். எனவே தெருநாய்களை பிடித்து அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கிருஷ்ணபாரதி, கலிக்கநாயக்கன்பட்டி.
கால்வாய் வசதி முறையாக செய்யப்படுமா?
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் தெ.பண்ணப்பட்டியில் சாக்கடை கால்வாய் வசதி முறையாக செய்யப்படவில்லை. இதனால் அங்குள்ள தெருக்களில் பல இடங்களில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதில் கொசுப்புழுக்கள் உருவாவதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. எனவே முறையாக சாக்கடை கால்வாய் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சந்திரன், தெ.பண்ணப்பட்டி.
குறுகிய சாலையால் போக்குவரத்து நெரிசல்
பழைய வத்தலக்குண்டுவில் இருந்து விராலிப்பட்டிக்கு செல்லும் சாலை குறுகலாக உள்ளது. இந்த சாலை வழியாகவே தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் இருந்து வரும் வாகனங்களும் வத்தலக்குண்டுவுக்கு வருகின்றன. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே விராலிப்பட்டிக்கு செல்லும் வாகனங்களை கோட்டைப்பட்டி சாலை வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விட்டால் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தவிர்க்கலாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பார்களா?
-பாண்டி, வத்தலக்குண்டு.
குடிநீர் தொட்டி இல்லாததால் பக்தர்கள் அவதி
பழனி பூங்கா ரோட்டில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் அலுவலகம் அருகே வைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை சீரமைப்பு பணி நடந்த போது அகற்றப்பட்டது. ஆனால் அதன் பிறகு மீண்டும் அந்த குடிநீர் தொட்டி வைக்கப்படவில்லை. இதனால் குடிநீர் கிடைக்காமல் பக்தர்கள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மாரிமுத்து, அடிவாரம்.



Next Story