வேலூரில் ராட்சத பாறை சரிந்து வீட்டின் மீது விழுந்து பெண் பலி. மகளை மீட்கும் பணி தீவிரம்


வேலூரில் ராட்சத பாறை சரிந்து வீட்டின் மீது விழுந்து பெண் பலி. மகளை மீட்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 14 Nov 2021 10:34 PM IST (Updated: 14 Nov 2021 10:34 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் பலத்த மழை பெய்த நிலையில் காகிதப்பட்டறை மலையில் இருந்து ராட்சத பாறை சரிந்து வீட்டின் மீது விழுந்ததில் தாய் பரிதாபமாக உயிரிழந்தார். கட்டிட இடுபாடுகளில் சிக்கிய மகளை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

வேலூர்

வேலூர் பலத்த மழை பெய்த நிலையில் காகிதப்பட்டறை மலையில் இருந்து ராட்சத பாறை சரிந்து வீட்டின் மீது விழுந்ததில் தாய் பரிதாபமாக உயிரிழந்தார். கட்டிட இடுபாடுகளில் சிக்கிய மகளை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

பழுதடைந்த வீடு

வேலூர் காகிதப்பட்டறை உழவர்சந்தை பகுதியை சேர்ந்தவர் பிச்சாண்டி (வயது 55). டீக்கடையில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி ரமணி (45). இவர்களுக்கு நிஷாந்தி (24), சங்கீதா (22) என்று 2 மகள்கள், கார்த்திக் (20) என்று ஒரு மகன் உள்ளனர்.  மகள்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. கார்த்திக் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார்.

பிச்சாண்டிக்கு சொந்தமான வீடு பழுதடைந்து உள்ளது. இதனால் மழைகாலங்களில் மேற்கூரையில் இருந்து மழைநீர் வீட்டிற்குள் விழுந்தது. அதனால் அந்த வீட்டை சரி செய்ய அவர்கள் முடிவு செய்தனர். இதையொட்டி பிச்சாண்டி குடும்பத்தினர் கடந்த வாரம் அதே பகுதியில் மலையடிவாரத்தில் (டான்சி பின்புறம்) உள்ள வாடகை வீட்டிற்கு இடம் பெயர்ந்தனர். பிச்சாண்டி வழக்கம்போல் நேற்று காலை வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் ரமணி மற்றும் நிஷாந்தி மட்டும் இருந்தனர்.

ராட்சத பாறை விழுந்தது

இந்த நிலையில் நேற்று மதியம் 1.30 மணியளவில் பலத்த மழை பெய்தது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்த மழையின் காரணமாக மலையின் சரிவில் இருந்த ராட்சத பாறை திடீரென சரிந்து உருண்டு பயங்கர சத்தத்துடன் பிச்சாண்டி வீட்டின் படுக்கை அறையின் மேற்கூரையில் விழுந்தது. 

தொடர்ந்து அந்த பாறை வீட்டையொட்டி நின்று கொண்டிருந்த மரத்தின் மீது மோதியபடி நின்றது.

பாறை விழுந்ததில் படுக்கை அறையின் பக்கவாட்டு சுவர்கள், மேற்கூரை இடிந்து வீட்டின் உள்ளே விழுந்தது. இதில், ரமணி, நிஷாந்தி ஆகியோர் படுகாயம் அடைந் கட்டிட இடிபாடுகளுக்குள் மாட்டி கொண்டனர். தாயும், மகளும் தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். அவர்களின் அலறல் சத்தத்தை கேட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள் 2 பேரையும் மீட்க முயன்றனர். ஆனால் வீட்டின் முன்பக்க கதவை அவர்களால் திறக்க முடியவில்லை.

பொதுமக்கள் வெளியேற்றம்

அதைத்தொடர்ந்து பொதுமக்கள் உடனடியாக தீயணைப்புத்துறையினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வேலூர் தீயணைப்பு வீரர்கள், வடக்கு போலீசார், வருவாய்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

முதற்கட்டமாக போலீசார் அந்த பகுதியில் வசிக்கும் அனைவரையும் அதே பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு செல்லும்படி அறிவுறுத்தினர். பின்னர் மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் அருகே உள்ள வீட்டின் சுவரை இடித்து பக்கவாட்டு வழியாக இருவரையும் மீட்கும் முயற்சி நடந்தது.

தாய் பலி

 தகவலறிந்த வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார், உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான், உதவி கலெக்டர் விஷ்ணுபிரியா, கமிஷனர் சங்கரன் ஆகியோர் அங்கு வந்து பாறை விழுந்த வீட்டை பார்வையிட்டனர். பின்னர் மலைக்கு செல்லும் பாதை வழியாக சென்று கலெக்டர் ராட்சத பாறையை பார்வையிட்டு, வீட்டின் பின்பகுதி வழியாக மீட்பு பணியில் ஈடுபடும்படி உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள், போலீசார் அந்த வழியாக சென்று இருவரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னர் ரமணி மீட்கப்பட்டார். உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு,அவர் 108 ஆம்புலன்ச மூலம் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியில் ரமணி உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

மீட்பு பணி தீவிரம்

கட்டிட இடுபாடுகள் மற்றும் பாறையின் அடிப்பகுதியில் நிஷாந்தி மாட்டி கொண்டார். எனவே அவரை உடனடியாக மீட்டு வெளியே கொண்டு வருவதில் கடும் சிரமம் ஏற்பட்டது. 
நிஷாந்தியை மீட்கும் பணியில் 10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள், மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனை கலெக்டர் குமாரவேல்பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஆகியோர் மேற்பார்வையிட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே இதனை அறிந்த வேலூர் எம்.எல்.ஏ. ப.கார்த்திகேயன் சம்பவ இடத்துக்கு வந்து பாறை விழுந்த வீட்டை பார்வையிட்டார். பின்னர் அவர், மீட்பு பணிகள் குறித்து கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டிடம் கேட்டறிந்தார். வீட்டின் மீது பாறை விழுந்த தகவல் அறிந்த பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கிருந்து பொதுமக்களை கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினர். மேலும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும் ஈடுபட்டனர்.

வீட்டின் மீது பாறை விழுந்ததில் பெண் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story