திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 16 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது


திருப்பத்தூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 16 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது
x
தினத்தந்தி 14 Nov 2021 11:40 PM IST (Updated: 14 Nov 2021 11:40 PM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று நடந்த முகாம்களில் 16 ஆயிரம்பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று நடந்த முகாம்களில் 16 ஆயிரம்பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

16 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. மாவட்டத்தில் உள்ள 4 அரசு மருத்துவமனைகள், 37 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 294 நடமாடும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மருத்துவ குழுக்கள் மூலம் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை முகாம் நடைபெற்றது. 

நேற்று காலையில் திடீரென லேசான சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஆர்வமுடன் சென்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர். மாவட்டம் முழுவதும் நேற்று நடந்த கொரோனா தடுப்பூசி முகாமில் சுமார் 16 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

வெள்ளத்தில் நடந்து சென்ற செவிலியர்

திருப்பத்தூர் அருகே நெல்லிவாசல் நாடு ஊராட்சியில் உள்ள நெல்லிபட்டு கிராமத்திலும் கொரோனா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. அந்த கிராமத்திற்கு செல்வதற்கு போதுமான பஸ் வசதி ஏதும் கிடையாது. மேலும் காலையில் அப்பகுதியில் பலத்தமழை பெய்து கொண்டு இருந்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமலும், மலைப்பகுதியில் இருந்து வரும் காட்டாற்று வெள்ளத்தில் கிராம சுகாதார செவிலியர் ஜானகி மற்றும் மருத்துவமனை பணியாளர் சரவணன் ஆகிய 2 பேரும் மழையில் குடை பிடித்தவாறு நனைந்து கொண்டே மலைக்கிராமத்திற்கு சென்று தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர். 

மலைக்கிராமத்தில் சுமார் 61 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். பஸ் வசதி இல்லாமலும், மழையைப் பொருட்படுத்தாமல் கிராமத்திற்கு தடுப்பூசி எடுத்துச்சென்ற கிராம சுகாதார செவிலியரை அப்பகுதி பொதுமக்கள் பாராட்டினர்.

Next Story