இந்த ஆண்டு இதுவரை 399 மி.மீட்டர் வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது


இந்த ஆண்டு இதுவரை 399 மி.மீட்டர் வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது
x
தினத்தந்தி 15 Nov 2021 12:25 AM IST (Updated: 15 Nov 2021 12:38 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போது கடந்த அக்டோபர் முதல் இதுவரை 399 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் தற்போது கடந்த அக்டோபர் முதல் இதுவரை 399 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

வடகிழக்கு பருவமழை

தமிழக கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் அனைத்து பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. தாழ்வான பகுதிகளை மழைவெள்ளம் சூழ்ந்துவிட்டது. இடைவிடாது பெய்து வரும் மழையால் மாவட்டம் முழுவதும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியும், நீர்நிலைகள் நிரம்பியும் வருகின்றன.
மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழைஅளவு 827 மில்லிமீட்டர். கடந்த 2020-ல் ராமநாதபுரம் மாவட்டத்தில் 845.36 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது சராசரியைவிட 18.47 மில்லிமீட்டர் ஆகும். வடகிழக்கு பருவமழை தொடங்கும் அக்டோபர் மாதம் சராசரி மழை அளவு 182.60 அதிகம் ஆகும்.இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் 222.05 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

5 ஆண்டுகளில்...

இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 29 நாட்கள் மழை பெய்துள்ளது.நவம்பரில் மாவட்ட சராசரி மழை அளவு 206.30 ஆகும். இந்த ஆண்டு நவம்பரில் இதுவரை 177.65 மி.மீட்டர் மழை பெய்துள்ளது.கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய 45 நாட்களில் 399 மி.மீட்டர் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கீழ் 641 கண்மாய்களும், ஊரகவளர்ச்சி துறையின் கீழ் 1,122 சிறுபாசன கண்மாய்கள், 3 ஆயிரத்து 897 ஊருணிகள் என மொத்தம் 5 ஆயிரத்து 660 நீர்நிலைகள் உள்ளன. அவற்றில் பொதுப்பணித்துறையின் கீழ் உள்ள 31 கண்மாய்கள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் உள்ள ஒரு சிறுபாசன கண்மாய், 18 ஊருணிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. 

மழை பெய்ய வாய்ப்பு

மேலும் 111 கண்மாய்கள், 43 சிறுபாசன கண்மாய்கள், 344 ஊருணிகள்ஆகியவை 75 சதவீதம் கொள்ளளவை எட்டி உள்ளன. தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாலும் மேலும் மழை பெய்ய அதிக வாய்ப்பு உள்ளதால் இந்த ஆண்டு அனைத்து நீர்நிலைகளும் நிரம்ப வாய்ப்பு உள்ளது.
இந்த தகவலை ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story