தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
உயர்மட்ட நடைபாலம்
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே இம்மிடிநாயக்கனப்பள்ளி கிராமம் உள்ளது. கிருஷ்ணகிரி-ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த ஊரில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சூளகிரி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். தினமும் அவர்களில் பலர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. அந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்வதால் மாணவ, மாணவிகள் சாலையை கடக்க ஒருவித அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அந்த பகுதியில் மாணவ, மாணவிகள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல நடைமேம்பாலம் அமைக்க வேண்டும்.
-ரமேஷ், இம்மிடிநாயக்கனப்பள்ளி, கிருஷ்ணகிரி.
கோவில் வாசலில் கார்கள்
தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் பின்புறத்தில் உள்ள நுழைவுவாசல் முன்பு பொதுமக்கள் தங்களது கார்களை நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். இதேபோன்று தட்சிணாமூர்த்தி மட தெருவில் ஏராளமானவர்கள் கார்களை நிறுத்திவிட்டு சென்று விடுகின்றனர். குறிப்பாக வேறு பகுதியைச் சேர்ந்தவர்களும், இந்த தெருவில் கார்களை நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். இரவு நேரங்களில் அவசரமாக ஒரு வாகனம் சென்று திரும்ப முடியாத நிலை உருவாகிறது. எனவே கோவில் வாசல் முன்பும், அந்த தெருவிலும் கார்களை நிறுத்தாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கார்த்திகேயன், குமாரசாமிப்பேட்டை, தர்மபுரி.
வீணாகும் குடிநீர்
சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் அக்கரபாளையம் ஊராட்சி பாலம்பட்டி 9-வது வார்டு எல்லை பெருமாள் கோவில் அருகில் ஒரு மாத காலமாக இரு இடங்களில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி வீணாகிறது. இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-எஸ்.சந்திரசேகர், பாலம்பட்டி, சேலம்.
சேலம் சாரதா வித்யாலயா பள்ளிக்கு அருகில் கான்வென்ட் சாலையில் 3 மாதங்களுக்கு மேலாக குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அந்த பகுதியை கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
-ஊர்மக்கள், சேலம்.
தெருவிளக்கு இல்லை
சேலம் மாவட்டம் வீரபாண்டி ஒன்றியம் இனாம் பைரோஜி ஊராட்சி 4-வது வார்டு சேலம் மெயின் ரோட்டில் தெருவிளக்கு வசதி இல்லாததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் விபத்து மற்றும் ஆடு, கோழி திருட்டு போவதாகவும் கூறப்படுகிறது. எனவே இந்த பகுதியில் தெருவிளக்குகள் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர் பொதுமக்கள், இனாம் பைரோஜி, சேலம்.
சேலம் மாவட்டம் எடப்பாடி வாட்டர் டேங்க் அருகில் பூலாம்பட்டி ரோட்டில் பல நாட்களாக மின்விளக்கு எரியவில்லை. இதுபற்றி பலமுறை புகார் செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இரவு நேரங்களில் திருட்டுு போன்ற சமூக விரோத செயல்கள் நடக்கும் அபாயம் உள்ளது. எனவே அந்த பகுதியில் மின்விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், எடப்பாடி, சேலம்.
சேறும், சகதியுமான சாலை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேகப்பள்ளி ஊராட்சி கோவிந்த அக்கரஹாரம், மகரிஷிநகர் குடியிருப்பு பகுதிகளில் மண்ரோடு சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் குடியிருப்பு வாசிகள் நடந்து செல்லவோ, வாகனங்களில் செல்லவோ முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் மண் சாலையை, தார் சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-டி.தேவதாஸ், கோவிந்த அக்கரஹாரம், ஓசூர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா காட்டேரி பஞ்சாயத்து அனுமன் தீர்த்தம் 8-வது வார்டு ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி கிழே விழுந்து காயம் அடைகின்றனர். சாைலயில் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி நிற்பதால் அங்கு சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
-குணசேகரன், அனுமன்தீர்த்தம், கிருஷ்ணகிரி.
சேலம் அம்மாபேட்டை பகுதியில் பள்ளி செல்லும் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பள்ளி திறப்பதற்கு முன்பு சாலையை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-தேசிகன், அம்மாபேட்டை, சேலம்.
தெருநாய்கள் தொல்லை
சேலம் தேவாங்கபுரம் 29-வது வார்டு ஆரம்ப சுகாதார நிலையம் பின்புறம் தெருநாய்களின் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. அந்த பகுதியில் வாகனங்களில் செல்பவர்களையும், நடந்து செல்லும் குழந்தைகள், முதியவர்களையும் துரத்தி துரத்தி கடித்து வருகிறது. மேலும் தெருவில் நின்று ஒன்றுடன் ஒன்று சண்டையிட்டு கொள்கின்றன. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சத்துடனே சாலையில் செல்கின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து செல்லவேண்டும்.
ஊர்மக்கள், தேவாங்கபுரம், சேலம்.
சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. வாகன ஓட்டிகளையும், குழந்தைகளையும் துரத்தி வருவதனால் விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. எனவே இதற்கு ஒரு தீர்வு காண மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நவின் கிருஷ்ணா, ஜாகிர் அம்மாபாளையம், சேலம்.
Related Tags :
Next Story