60 நீர்நிலைகள் முழுமையாக நிரம்பி உள்ளன


60 நீர்நிலைகள் முழுமையாக நிரம்பி உள்ளன
x
தினத்தந்தி 15 Nov 2021 1:49 AM IST (Updated: 15 Nov 2021 1:49 AM IST)
t-max-icont-min-icon

60 நீர்நிலைகள் முழுமையாக நிரம்பி உள்ளன

சேலம், நவ.15-
சேலம் மாவட்டத்தில் தொடர் கனமழையால் 60 நீர்நிலைகள் முழுமையாக நிரம்பி உள்ளன என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
ஏரியில் கலெக்டர் ஆய்வு
சேலம் மாவட்டம் கெங்கவல்லி சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழையால் ஜங்கமசமுத்திரம் ஏரி முழுமையாக நிரம்பி உள்ளது. இந்த ஏரியை நேற்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வடகிழக்கு பருவ மழை தமிழகம் முழுவதும் பரவலாக பெய்து வரும் சூழ்நிலையில் சேலம் மாவட்டத்திலும் தற்போது பெய்த மழையினால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேட்டூர் அணை வரலாற்றில் 41-வது முறையாக தற்போது தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியுள்ளது. அதேபோன்று தற்போது மேட்டூர் அணையில் இருந்து 44-வது முறையாக உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. 
430 நீர்நிலைகள்
சேலம் மாவட்டத்திற்கு கிடைக்க வேண்டிய வடகிழக்கு பருவமழை (அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர்) 370.50 மி.மீ ஆகும். இதில் கடந்த 13-ந் தேதி வர 360.03 மி.மீ மழை அளவு பெறப்பட்டுள்ளது. இதனால் சேலம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. மீதமுள்ள நீர்நிலைகளும் நிரம்பும் நிலையில் உள்ளன.
சேலம் மாவட்டத்தில் மாநகராட்சி பகுதியில் 3 நீர்நிலைகளும், ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் 276 நீர்நிலைகளும், பேரூராட்சிகளின் கட்டுப்பாட்டில் 44 நீர்நிலைகளும், பொதுப்பணித்துறை (மேட்டூர் அணைக் கோட்டம்) கட்டுப்பாட்டில் 18 நீர்நிலைகளும், பொதுப்பணித்துறை சரபங்கா கட்டுப்பாட்டில் 89 நீர்நிலைகளும் என மொத்தம் 430 நீர்நிலைகள் உள்ளன.
இவற்றில் தற்போது வரை 60 நீர்நிலைகள் முழுமையாக நிரம்பி உள்ளன. 49 நீர் நிலைகள் 75 சதவீதமும், 35 நீர்நிலைகள் 50 சதவீதமும் நிரம்பி உள்ளன. மேலும் தொடர்ச்சியாக பெய்து வரும் பருவமழையையொட்டி மாவட்டத்தில் மீதமுள்ள நீர்நிலைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது.
விளைச்சல் அதிகரிக்கும்
நடப்பு ஆண்டில் சேலம் மாவட்டத்தில் தற்போது வரை 1 லட்சத்து 80 ஆயிரத்து 133 ஹெக்டேர் பரப்பளவில் நெல், கரும்பு, பருத்தி, சிறுதானியங்கள், பயிறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதுதவிர தோட்டக்கலை துறையின் சார்பில் பழங்கள், காய்கறிகள், வாசனை திரவியங்கள், மலைபயிர்கள் என 60 ஆயிரத்து 949 ஹெக்டேர்  பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் பருவ மழையால் சேலம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள், குளங்கள் நிரம்பி உள்ளன. இதனால் இந்த ஆண்டு பயிர் சாகுபடி விளைச்சல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு கலெக்டர் கார்மேகம் கூறினார்.
இந்த ஆய்வின் போது ஆத்தூர் உதவி கலெக்டர் சரண்யா, வேளாண்மை இணை இயக்குனர் கணேசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story