குமரியில் வெள்ளம் வடியாததால் குட்டி தீவுகளாக மாறிய குடியிருப்புகள்


குமரியில் வெள்ளம் வடியாததால் குட்டி தீவுகளாக மாறிய குடியிருப்புகள்
x
தினத்தந்தி 15 Nov 2021 2:08 AM IST (Updated: 15 Nov 2021 2:08 AM IST)
t-max-icont-min-icon

3 நாட்கள் ஆகியும் குமரியில் வெள்ளம் வடியாததால் குடியிருப்புகள் குட்டி தீவுகளாக மாறியது. இதனால் முகாம்களில் தஞ்சம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

நாகர்கோவில், 
3 நாட்கள் ஆகியும் குமரியில் வெள்ளம் வடியாததால் குடியிருப்புகள் குட்டி தீவுகளாக மாறியது. இதனால் முகாம்களில் தஞ்சம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வெள்ளத்தில் மிதக்கிறது
கடந்த 3 நாட்களாக பெய்த கனமழையால் குமரி மாவட்டம் தொடர்ந்து வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இந்த வெள்ளப்பெருக்கிற்கு அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரிப்பு மற்றும் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளம் ஆகியவையே காரணம் என சொல்லப்படுகிறது.
அதாவது நேற்று முன்தினம் மாலையில் குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார்-1, சிற்றார்-2, மாம்பழத்துறையாறு ஆகிய அணைகளுக்கு வினாடிக்கு 44 ஆயிரத்து 201 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அணைகளில் இருந்து வினாடிக்கு 39 ஆயிரத்து 834 கன அடி தண்ணீர் உபரியாக வெளியேற்றப்பட்டது. 
மக்கள் தவிப்பு
இதனால் குழித்துறை தாமிரபரணியாறு, பரளியாறு, வள்ளியாறு, பழையாறு, கோதையாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேலும் திடீரென பெருவெள்ளம் பாய்ந்தோடியதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள குளங்கள், கால்வாய்களில் உடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும், வயல்கள், வாழை மற்றும் ரப்பர் தோட்டங்கள், தென்னந்தோப்புகளுக்குள்ளும் மழை வெள்ளம் புகுந்துள்ளது. அதிகபட்சமாக ஆள் உயர அளவிலும், குறைந்தபட்சமாக இடுப்பளவு வரையிலுமாக தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், திருவட்டார், கிள்ளியூர், விளவங்கோடு தாலுகா பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் குட்டித் தீவுகளாக மாறி உள்ளன. எனவே மாவட்டம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக் கிறது. இதனால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித் தனர். சாலைகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் சில இடங்களில் தற்போது தண்ணீர் வடிந்துள்ளது.
3,278 பேர் தங்க வைப்பு
வெள்ளத்தில் சிக்கியவர் களை பேரிடர் மீட்புக்குழுவினரும், தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார், வருவாய்த்துறையினர் இணைந்து மீட்டு அந்தந்த பகுதிகளில் உள்ள பாதுகாப்பு மையங்களில் பாதுகாப்பாக தங்க வைத்துள்ளனர். நேற்று காலை நிலவரப்படி 6 தாலுகாக்களுக்கு உட்பட்ட 65 பகுதிகளில் 1,040 குடும்பங்களைச் சேர்ந்த 1,063 ஆண்களும், 1,620 பெண்களும், 595 சிறுவர்களுமாக மொத்தம் 3,278 பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உணவு, மருந்து பொருட்கள், போர்வை, பாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மாவட்ட நிர்வாகத்தால் செய்து கொடுக்கப்படுகிறது.
வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளின் மாடி வீடுகளில், மொட்டை மாடிகளில் குடியிருப்பவர்கள் வெளியே வரமுடியாததால் பால், காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் உணவு பொருட்கள் வழங்க மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பல இடங்களில் மழை வெள்ளத்தில் பாம்புகளும், விஷ பூச்சிகளும் மிதந்து வந்தன. 100-க்கும் மேற்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு காரணமாக மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் இருளில் தவித்த மக்கள் அச்சத்துடன் விடிய, விடிய தூங்காமல் தவித்தனர்.
கவலையில் மக்கள்
குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ளம் வடியாமல் இருப்பதால் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் எப்போது வெள்ளம் வடியும்? மீண்டும் தங்களது வீடுகளுக்கு எப்போது திரும்புவோம்? என்ற கவலையோடு காணப்படுகிறார்கள். பலர் தங்களது வீடு உள்ள பகுதிகளுக்குச் சென்று வெள்ளம் வடிந்து விட்டதா? என அடிக்கடி பார்த்து வருகிறார்கள். குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம் வடியாததால் முகாம்களில் தஞ்சம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நேற்று காலையில் இருந்து மாலை வரை மழை அவ்வளவாக இல்லை. சாரல் மழையாக இருந்தது. இதனால் அணைகளுக்கு வரும் தண்ணீர் வரத்தும் குறைந்துள்ளது. எனவே அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது.
நீர்திறப்பு குறைந்தது
நேற்று பிற்பகல் நிலவரப்படி பேச்சிப்பாறை அணைக்கு வினாடிக்கு 5,304 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 6,239 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 4,732 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 5,288 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-1 அணைக்கு வினாடிக்கு 772 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 536 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. சிற்றார்-2 அணைக்கு வினாடிக்கு 328 கன அடி தண்ணீர் வருகிறது. ஆனால் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை. மொத்தத்தில் இந்த அணைகளுக்கு வினாடிக்கு 19,736 கன அடி தண்ணீர் வந்தது. அணைகளில் இருந்து வினாடிக்கு 12 ஆயிரத்து 63 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மழை குறைந்தாலும் கிராமங்களுக்குள் புகுந்த வெள்ளம் வடியவில்லை. தொடர்ந்து வெள்ளத்தில் மிதக்கிறது. 3 நாட்கள் ஆகியும் வெள்ளம் வடியாததால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
இந்தநிலையில் மேலடுக்கு சுழற்சி காரணமாக 14-ந் தேதியும் (அதாவது நேற்று), 15-ந் தேதியும் (இன்றும்) குமரி மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Next Story