ஆன்-லைன் நிறுவனம் நடத்தி ரூ.69 லட்சம் மோசடி


ஆன்-லைன் நிறுவனம் நடத்தி ரூ.69 லட்சம் மோசடி
x
தினத்தந்தி 14 Nov 2021 9:18 PM GMT (Updated: 14 Nov 2021 9:18 PM GMT)

ஆன்-லைன் நிறுவனம் நடத்தி ரூ.69 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி:

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ஆன்-லைன் நிறுவனம்
சென்னை பம்மல் முத்தமிழ் நகரைச் சேர்ந்த ராமசுப்புவின் மகன் அரவிந்தன்(வயது 36). எம்.பி.ஏ. பட்டதாரியான இவர் வேலை தேடி வந்தார். இவருடைய மனைவி சூர்யாபிரபா திருச்சியை சேர்ந்தவர் ஆவார். திருச்சியில் சூர்யாபிரபாவின் வீட்டின் அருகில் வசித்து வந்த மைக்கேல் சேவியர்ராஜின் மகன் மெர்வின் கிறிஸ்டோபர் (28) என்பவர், அரவிந்தனுக்கு அறிமுகம் ஆனார்.
அவர் ஆன்-லைன் நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் முறையில் வேலை செய்து சம்பாதிக்கலாம் என்று அவரும், அவருடைய குடும்பத்தினரும் அரவிந்தனிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளனர். அதற்கான பதிவு கட்டணமாக முதல் கட்டமாக ரூ.30 ஆயிரம் செலுத்த வேண்டும் என்பது போன்று 3 திட்டங்களை அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ரூ.69 லட்சம் மோசடி புகார்
இதை நம்பிய அரவிந்தன் மற்றும் அவரது நண்பர்கள் என 11 பேர் ஆன்-லைன் அலுவலகம் உள்ள திருச்சி தில்லை நகர் 11-வது குறுக்கு தெருவிற்கு வந்து பதிவு கட்டணத்தை செலுத்தி உள்ளனர். அப்போது மாதந்தோறும் ஊதியம் தருவதாக கூறி காப்பீட்டு மற்றும் ஆய்வு கட்டணம் என பல நிலைகளில் பல்வேறு காலகட்டங்களில் இவர்களிடம் ரூ.69 லட்சத்து 43 ஆயிரத்து 500 பெற்றதாக தெரிகிறது.
ஆனால் அவர் கூறியபடி ஊதியமும், லாபத்தில் பங்கும் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட நபர்கள் கிறிஸ்டோபரை அணுகி கொடுத்த பணத்தையும், ஊதியத்தையும் கேட்டபோது தொடர்ந்து அவர் ஏமாற்றி வந்ததாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர்கள், கிறிஸ்டோபரும் அவருடைய குடும்பத்தினரும் தங்களிடம் ரூ.69 லட்சத்து 43 ஆயிரத்து 500 மோசடி விட்டதாக திருச்சி தில்லைநகர் போலீஸ் நிலையத்தில் அரவிந்தன் உள்ளிட்ட 11 பேரும் புகார் கொடுத்தனர்.
வாலிபர் கைது
அதன்பேரில் மெர்வின் கிறிஸ்டோபர், அவரது தந்தை சேவியர் ராஜ் (68), தாய் மேரி (58), சகோதரி மோனிகா ஜெனட் (33) உறவினர் தம்பு ஆகிய 5 பேர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மெர்வின் கிறிஸ்டோபரை கைது செய்த போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story