60 வீடுகளின் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன


60 வீடுகளின் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன
x
தினத்தந்தி 15 Nov 2021 2:48 AM IST (Updated: 15 Nov 2021 2:48 AM IST)
t-max-icont-min-icon

2 கிராமங்களில் 60 வீடுகளின் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன.

துறையூர்:

பெயர்ந்து விழுந்தன
திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் துறையூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த வாலீஸ்புரம் மற்றும் சேனப்பநல்லூர் ஆகிய கிராமங்களில் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் வாலீஸ்புரத்தில் சுமார் 35 வீடுகளும், சேனப்பநல்லூரில் சுமார் 60 வீடுகளும் தமிழக அரசால் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தொடர் மழையால் இந்த வீடுகள் அனைத்தும் பாதிப்படைந்துள்ளன. மேலும் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் 2 கிராமங்களிலும் தலா 30 வீடுகள் என இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட சுமார் 60 வீடுகளின் உட்புறத்தில் உள்ள மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கீழே விழுந்தன.
உயிர் தப்பினர்
இதில் வாலீஸ்புரத்தில் உள்ள விவசாயியான வீரமணி என்பவரது வீட்டில் அவர் தூங்கிக்கொண்டிருந்தபோது, அவருக்கு அருகிலேயே மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்துள்ளது. இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதேபோல் மற்ற வீடுகளில் இருந்தவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இது குறித்து அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் தினமும் இரவில் அச்சத்துடனேயே தூங்கும் நிலையில் உள்ளோம். மேலும் சுவர் இடிந்து எங்கள் மீது விழுந்து விடுமோ என்ற அச்சத்திலேயே, எங்களது குழந்தைகளோடு வசித்து வருகிறோம். எனவே இதில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, வீடுகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு, எங்களின் உயிரை காக்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்தனர்.

Next Story