பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து பேசவில்லை - டெல்லியில் இருந்து திரும்பிய ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி


பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து பேசவில்லை - டெல்லியில் இருந்து திரும்பிய ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி
x
தினத்தந்தி 15 Nov 2021 3:37 AM IST (Updated: 15 Nov 2021 3:37 AM IST)
t-max-icont-min-icon

சொந்த காரணங்களுக்காக டெல்லி சென்றதாகவும், பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து பேசவில்லை என்றும் முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

டெல்லி திடீர் பயணம்

  முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று கட்சி மேலிட தலைவர்களை சந்தித்து பேசி இருந்தார். இடைத்தேர்தல் தோல்வி மற்றும் கர்நாடக மேல்-சபைக்கு நடைபெற உள்ள தேர்தல் குறித்து அவர், பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து பேசிவிட்டு பெங்களூருவுக்கு திரும்பி இருந்தார். பசவராஜ் பொம்மை பெங்களூருவுக்கு திரும்பியதும், முன்னாள் முதல்-மந்திரியான ஜெகதீஷ் ஷெட்டர் திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றார்.

  ஜெகதீஷ் ஷெட்டரின் திடீர் டெல்லி பயணம் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியது. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் சில மாநில தலைவர்களுக்கு எதிராக பேசுவதற்காக அவர் டெல்லிக்கு சென்றிருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், டெல்லியில் இருந்து நேற்று காலையில் ஜெகதீஷ் ஷெட்டர் பெங்களூருவுக்கு திரும்பினார். அவரிடம், டெல்லி சென்றது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

சந்தித்து பேசவில்லை

  என்னுடைய சொந்த காரணங்கள், எனது சொந்த பிரச்சினைகளுக்காக டெல்லிக்கு சென்றிந்தேன். அந்த வேலைகளை முடித்துவிட்டு பெங்களூருவுக்கு திரும்பி உள்ளேன். பா.ஜனதா மேலிட தலைவர்களை சந்தித்து பேசுவதற்காக நான் டெல்லி சென்றதாக வரும் தகவல்கள் உண்மை இல்லை. எனது டெல்லி பயணத்தின் போது எந்த ஒரு பா.ஜனதா மேலிட தலைவர்களையும் சந்தித்து பேசவில்லை.

  பிட்காயின் விவகாரம் உள்ளிட்ட எந்த பிரச்சினைகள் குறித்தும் பேசுவதற்காக டெல்லி செல்லவில்லை. பிட்காயின் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அரசியல் செய்கிறார்கள். மக்களிடையே தவறான தகவல்களை பரப்பி, பா.ஜனதாவுக்கு கெட்ட பெயர் உண்டாக்க முயற்சிக்கிறார்கள். பிட்காயின் விவகாரத்தில் பா.ஜனதாவினா் யாருக்கும் தொடர்பு இல்லை. இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்.
  இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.

Next Story