சேலம் தர்மபுரி இடையே தண்டவாளத்தில் மீண்டும் மண் சரிவு ரெயில் போக்குவரத்து பாதிப்பு
சேலம் தர்மபுரி இடையே தண்டவாளத்தில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நல்லம்பள்ளி:
சேலம் தர்மபுரி இடையே தண்டவாளத்தில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ரெயில் தடம் புரண்டது
கேரளா மாநிலம் கண்ணூரில் இருந்து கர்நாடக மாநிலம் யஷ்வந்த்பூருக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே உள்ள வே.முத்தம்பட்டி மலைப்பாதை வழியாக கடந்த 12-ந் தேதி சென்றது. அப்போது தொடர் மழையின் காரணமாக பாறைகள் உருண்டு தண்டவாளத்தில் விழுந்தன. இதனால் 7 ரெயில் பெட்டிகள் தடம் புரண்டது.
இதையடுத்து ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு சேலத்தில் இருந்து தர்மபுரி வழியாக செல்லும் அனைத்து ரெயில்களையும் மாற்று பாதையில் திருப்பி விட்டனர். தொடர்ந்து தண்டவாளத்தில் விழுந்த பாறைகள் அகற்றப்பட்டு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணி முடிவடைந்து நேற்று முன்தினம் ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து சேலம்- தர்மபுரி வழியாக ரெயில் போக்குவரத்து தொடங்கியது.
மீண்டும் மண் சரிவு
இந்த நிலையில் நேற்று முன்தினம் வே.முத்தம்பட்டி மலைப்பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக ரெயில் தண்டவாளத்தில் மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது. இதில் சிறிய பாறைகள் தண்டவாளத்தில் விழுந்தன. இதனால் அந்த பகுதியில் நேற்று மீண்டும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் தென்னக ரெயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணியை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதற்காக சேலம்- தர்மபுரி இடையே சென்று வந்த அனைத்து ரெயில்களும் மீண்டும் மாற்றுப்பாதை வழியே திருப்பி விடப்பட்டன. ரெயில்வே ஊழியர்கள் தண்டவாளத்தில் ஏற்பட்ட மண் சரிவை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story