திரு.வி.க.நகர் தொகுதியில் மழைநீர் தேக்கம்-மின்தடை கண்டித்து 10 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல்
திரு.வி.க.நகர் தொகுதியில் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீர் அகற்றப்படாதது மற்றும் மின்தடையை கண்டித்து 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மழைநீர் தேக்கம்-மின்தடை
சென்னையில் பெய்த கனமழை காரணமாக திரு.வி.க.நகர் தொகுதிக்கு உட்பட்ட புளியந்தோப்பு, ஓட்டேரி, பேசின்பிரிட்ஜ், கன்னிகாபுரம் உள்ளிட்ட பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. மழை ஓய்ந்து 3 நாட்கள் ஆன நிலையிலும் பல இடங்களில் இன்னும் வீடுகளை சூழ்ந்த தண்ணீர் வடியாமல் உள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்கள் வாங்கக்கூட பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் இந்த பகுதிகளில் 7 நாட்களாகியும் மின்சாரம் வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதை கண்டித்து புளியந்தோப்பு பகுதியில் கடந்த 2 நாட்ளாக பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாலை மறியல்
இந்தநிலையில் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும். உடனடியாக மின்சாரம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை திரு.வி.க.நகர் தொகுதியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு ஓட்டேரி அடுத்த ஜமாலியா மங்களபுரம் சந்திப்பில் 100-க்கும் மேற்பட்டோரும், புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் 50 பேரும், டாக்டர் அம்பேத்கர் கல்லூரி சாலையில் 70 பேரும், புளியந்தோப்பு கே.பி.பார்க் குடியிருப்பு மற்றும் காந்தி நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50 பேரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அத்துடன் மழைநீரை அகற்ற அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி நேற்று முன்தினம் இரவு பேசின்பிரிட்ஜ் மற்றும் புளியந்தோப்பு போலீஸ் நிலையங்களிலும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
அதிகாரிகள் பேச்சுவார்த்தை
அதேபோல் நேற்று காலை புளியந்தோப்பு நெடுஞ்சாலை மற்றும் திருவேங்கடசாமி தெரு சந்திப்பிலும், டிமலஸ் சாலை இந்து யூனியன் கமிட்டி நடுநிலைப்பள்ளி சந்திப்பில் தட்டான்குளம் பகுதியை சேர்ந்த பொதுமக்களும், புளியந்தோப்பு ராமசாமி தெரு பகுதியில் அப்பகுதி மக்களும், புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் பிரின்சஸ் பள்ளி அருகில் உள்ள சந்திப்பில் அப்பகுதி மக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆனால் அதிகாரிகள் யாரும் வராததால் புளியந்தோப்பு போலீஸ் நிலையம் முன்பு கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் புளியந்தோப்பு நெடுஞ்சாலை கிரே நகர் சந்திப்பில் 50-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதேபோல் பேசின் பிரிட்ஜ் மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு அங்கும் சாலை மறியலில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடங்களுக்கு விரைந்துவந்த போலீசார் மற்றும் அதிகாரிகள், விரைவில் மழைநீர் அகற்றப்பட்டு மீண்டும் மின்சாரம் வழங்கப்படும் என உறுதி அளித்தனர். அதை ஏற்று சாலை மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story