மண்பானை உற்பத்தி தொழில் பாதிப்பு
பலத்த மழையால் மண்பானை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது
தளி, நவ.16-
பலத்த மழையால் மண்பானை உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது
மன்பானை
ஆரோக்கியத்தை அள்ளித் தந்து உடல்நலனை காப்பதில் முக்கிய பங்கு வகிப்பது மண்பாண்டங்கள். ஆதி மனிதனின் முதன்மை தொழிலாக கருதப்படும் மண்பாண்ட தொழிலில் பல்வேறு குடும்பங்கள் ஈடுபட்டு வந்தது. .பல்வேறு வண்ணங்களில் விதவிதமான உருவத்தில் மனதை கவரும் விதத்தில் வீட்டை அலங்கரித்து வந்த மண்பாண்டங்கள் நாகரிகம் என்னும் மாயையால் விடை பெற்றுவிட்டது. சமையலில் மண்பாண்டங்கள் பயன்பாடு குறைந்ததோ அன்றே பல்வேறுவிதமான நோய்கள் உடலை தொற்றிக்கொள்ள ஆரம்பித்து விட்டது. அதில் இருந்து மீள முடியாமல் இன்று வரையிலும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.
நாகரிகத்தின் பெயரால் தொலைத்த பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப விதவிதமான உருவங்களில் மண்பாண்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதன் மகத்துவத்தை உணர்ந்த இன்றைய தலைமுறையினர் மெல்ல மெல்ல அதன் பயன்பாட்டுக்கு மாறி வருகின்றனர். ஆனால் பரம்பரை பரம்பரையாக தொழிலில் ஈடுபட்டு வந்த மண்பாண்ட உற்பத்தியாளர்கள் போதிய உதவி கிடைக்காததால் தொழிலை கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து ஜல்லிபட்டியை சேர்ந்த எர்ரப்பன் என்பவர் கூறியதாவது:-
பாதிப்பு
மண்பானைகள் உற்பத்திக்கு தேவையான களிமண்ணை தினைக்குளம் பகுதியில் இருந்து சரக்கு வாகனத்தின் மூலமாக எடுத்து வருகின்றோம். பின்பு அந்தமண்ணை சலித்து சுத்தப்படுத்தி வெயிலில் காய வைப்போம். நன்றாக காய்ந்த பின்பு மணலில் கலந்து தண்ணீர் ஊற்றி பிசைந்து ஊறவைப்போம்.இதையடுத்து அதை நன்றாக காலால் மிதித்து பக்குவப்படுத்தி மரச்சக்கரத்தின் மையப்பகுதியில் வைத்து தேவையான உருவங்களில் சட்டிகளை வடித்தெடுப்போம்.அதைத் தொடர்ந்து அதன் உருவத்தை ஒழுங்குபடுத்தி நிழலில் உலர்த்தி வெயிலில் காயவைத்து அதன் பின்பு சூளையில் வைத்து தீ மூட்டி பக்குவப்படுத்தி உருவத்தையும் உறுதித் தன்மையையும் இறுதி செய்கிறோம்.
இவ்வாறாக நாளொன்றுக்கு 20 பானைகள் தயாரிக்க முடியும். ஆனால் மண்எடுத்து வருகின்ற செலவு, உற்பத்திகூலி போன்றவை கழித்தால் ரூ. 300 மட்டுமே கிடைக்கும்.முன்பு இந்த பகுதியில் 4 பேர் ஈடுபட்டு வந்த இந்த தொழிலில் தற்போது நான் மட்டுமே ஈடுபட்டு வருகின்றேன். மண்பானைகள் தயாரிப்புக்கு தேவையான மூலப்பொருளான களிமண் தாராளமாக கிடைத்து அரசு நிதியுதவி அளித்தால் ஊக்கத்தோடு உற்பத்தியில் ஈடுபடமுடியும்.அதிகப்படியான மண்பானைகளை தயாரித்து பொதுமக்களின் உடல்நலனை காக்கும் உன்னதமான தொழிலை திறம்பட செய்ய முடியும். வடகிழக்கு பருவ மழையால் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக உற்பத்தி தொழில் முழுவதுமாக முடங்கி விட்டது. எனவே நலிவடைந்து வருகின்ற மண்பாண்ட தொழிலை புத்துயிர் பெறச்செய்வதற்கு அரசு உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story