ஐப்பசி மாதத்தின் கடைசி முகூர்த்த நாளையொட்டி பழனி கோவிலில் ஒரே நாளில் 50 திருமணங்கள் அடிவாரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்
ஐப்பசி மாதத்தின் முகூர்த்த நாளையொட்டி பழனி திருஆவினன்குடி கோவிலில் ஒரேநாளில் 50 திருமணங்கள் நடைபெற்றது. இதனால் பழனி அடிவாரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் முடிக்காணிக்கை, அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்துகின்றனர். ஆனால் மலைக்கோவிலில் வைத்து முடிக்காணிக்கை மற்றும் காதுகுத்து, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி இல்லை. எனவே பழனி அடிவாரம் திருஆவினன்குடி கோவிலில் வைத்தே திருமணம், காதுகுத்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளை பக்தர்கள் நடத்தி வருகின்றனர்.
மேலும் திருஆவினன்குடி கோவிலில் சாமி தரிசனம் செய்த பின்னரே பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் விசேஷம் மற்றும் முகூர்த்த நாட்களில் மலைக்கோவில் போன்றே திருஆவினன்குடி கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.
ஒரேநாளில் 50 திருமணங்கள்
இந்தநிலையில் நேற்று ஐப்பசி மாதத்தில் கடைசி முகூர்த்தநாள் என்பதால், பலரும் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி பழனி திருஆவினன்குடி கோவிலில் நேற்று ஒரேநாளில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தது. கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் மணமக்களின் உறவினர்கள் கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் பழனி கோவிலுக்கு வந்ததால் அடிவாரம் பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
குறிப்பாக பழனி பஸ்நிலையத்தில் இருந்து திருஆவினன்குடி செல்லும் குளத்துரோடு, அடிவாரம் ரோடுகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 2 மணி நேரம் இந்த நெரிசல் இருந்ததால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இதையடுத்து போக்குவரத்து போலீசார் அங்கு வந்து வாகன போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story