பஸ் மோதி முதியவர் பலி
பஸ் மோதி முதியவர் பலி
ஊத்தங்கரை, நவ.16-
ஊத்தங்கரை அருகே அரசு பஸ்சும், மொபட்டும் மோதிக் கொண்ட விபத்தில் முதியவர் பலியானார். நெஞ்சை பதற வைக்கும் இந்த விபத்து காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-
விவசாயி
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா கல்லாவி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 65). விவசாயி. இவர் நேற்று கெரிகப்பள்ளி சாலையில் இருந்து ஊத்தங்கரை நோக்கி தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
வீரியம்பட்டி கூட்டு ரோடு ஜங்ஷன் அருகில் அவர் வந்த போது திருவண்ணாமலையில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற அரசு பஸ், முருகேசன் சென்ற மொபட் மீது மோதியது.
பலி
கண் அமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் முருகேசன் பஸ்சுக்கு அடியில் சிக்கி பலியானார். அந்த பகுதியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பள்ளிக்கூடங்களுக்கு செல்வதற்காக போலீசார் காத்து நின்றனர். அவர்கள் விபத்தை பார்த்து அலறினார்கள்.
தகவல் அறிந்த ஊத்தங்கரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான முருகேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து ஊத்தங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விபத்து காட்சிகள் வைரலானது
இதற்கிடையே முருகேசன் விபத்தில் சிக்கி பலியாகும் காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அதாவது, முருகேசன் மொபட்டில் சென்று கொண்டிருக்கிறார். அந்த வழியாக வந்த பஸ் முருகேசன் மொபட் மீது மோதுகிறது.
பஸ்சின் முன்பக்க சக்கத்தில் மொபட்டுடன் முருகேசன் சிக்குகிறார். பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைகிறது. இதைக்கண்டு அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்ற மாணவிகள் அலறினார்கள். நெஞ்சை பதற வைக்கும் இந்த காட்சிகள் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story