கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட நரிக்குறவர்கள்
கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட நரிக்குறவர்கள்
கிருஷ்ணகிரி, நவ.16-
தொகுப்பு வீடு கேட்டு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நரிக்குறவர்கள் திரண்டனர். அவர்கள் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து உதவித்தொகை, விலையில்லா தையல் எந்திரம், சலவை பெட்டி, சாலை வசதி, மின் இணைப்பு, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 191 மனுக்கள் கலெக்டரிடம் பொதுமக்கள் கொடுத்தனர்.
அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி அந்த மனுக்கள் மீது 3 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தகுதி இல்லாத மனுக்கள் தொடர்ந்து வரும் பட்சத்தில் அந்த மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாக்கியலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் கோபு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் அமீர்பாஷா உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
நரிக்குறவ மக்கள்
இதற்கிடையே குருபரப்பள்ளி ஊராட்சி சிக்காரிமேட்டை சேர்ந்த நரிக்குறவ இன மக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நாங்கள் 200 குடும்பங்கள் வசித்து வருகிறோம். ஆனால் 80 குடும்பங்களுக்கு மட்டும் அரசு தொகுப்பு வீடுகள் கட்டி கொடுத்துள்ளது. இதில் ஒரு வீட்டில் 2 அல்லது 3 குடும்பங்கள் சேர்ந்து வாழும் நிலை உள்ளது. சிலர் அந்த பகுதியில் தரையில் துணிகளை கட்டி வீடுகளாக வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு மின் இணைப்பு, சாக்கடை கால்வாய், சிமெண்ட் சாலை, குடும்ப அட்டை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை.
அடிப்படை வசதிகள்
இருளர் இன மக்களுக்கு உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அரசு உத்தரவிட்ட நிலையில் எங்கள் பகுதியில் வசிக்கும் 50 குடும்பங்களுக்கு புதிதாக தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும். இதுதவிர அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும்.
மேலும், 60 பேருக்கு கொடுத்து வந்த உதவி தொகையும் வருவதில்லை. எங்கள் இனங்களை சேர்ந்தவர்கள் மாவட்டத்தின் 6 இடங்களில் வசித்து வருகிறோம். அனைவருக்கும் உடனடியாக அடிப்படை வசதிகள் மற்றும் தொகுப்பு வீடுகள் கட்டி தரவேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story