அரிசி மூட்டைகள் ஏற்றிச்சென்ற லாரியை மறித்து தொழிலாளர்கள் போராட்டம்
கோவில்பத்து நெல் சேமிப்பு கிடங்கில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அரிசி மூட்டைகள் ஏற்றிச்சென்ற லாரியை மறித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்:
கோவில்பத்து நெல் சேமிப்பு கிடங்கில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி அரிசி மூட்டைகள் ஏற்றிச்சென்ற லாரியை மறித்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல் சேமிப்பு கிடங்கு
வேதாரண்யம் தாலுகா கோவில்பத்தில் ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய நெல் சேமிப்பு கிடங்கு ரூ.165 கோடியில் கட்டப்பட்டு உள்ளது. இந்த நெல் சேமிப்பு கிடங்கு கடந்த கஜா புயலின் போது முற்றிலும் பாதிக்கப்பட்டு மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது குறுவை நெல்லை விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டு இந்த கிடங்கில் நெல் மூட்டைகள் இருப்பு வைக்கப்படுகிறது.
தினமும் 50 முதல் 85 லாரிகளில் இந்த கிடங்கிற்கு நெல் மூட்டைகள் மற்றும் அரிசி மூட்டைகள் கொண்டு வரப்படும். இந்த நெல் மூட்டைகளை இறக்கும் பணியில் சுமார் 200 தற்காலிக தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு ஒரு நெல் மூட்டையை இறக்குவதற்கு கூலியாக ஒரு ரூபாய் 22 பைசாவும், அரிசி மூட்டை ஏற்றுவதற்கு ரூ.5 கூலியாக வழங்கப்படுகிறது.
தொழிலாளர்கள் போராட்டம்
இந்த நெல் சேமிப்பு கிடங்கில் குடிநீர், கழிவறை மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல் சேமிப்பு கிடங்கு தொழிலாளர்கள் நெல் மூட்டைகளை இறக்கமாலும், அரிசி மூட்டைகளை ஏற்றிச்சென்ற லாரியை மறித்தும் தொழிலாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் பாண்டியன், துணை மேலாளர் சீனிவாசன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து தொழிற்சங்க பிரதிநிதிகள் உமாநாத், அன்பரசன், வினோத், ராமலிங்கம் மற்றும் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில் வெளிச்சந்தை பணியாளர்களை கொண்டு பணிகள் நடைபெறுகிறது. பணியாளர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story