பாறை விழுந்து தாய்-மகள் பலி, மலையடிவாரத்தில் புறம்போக்கு இடங்களில் வசிப்பவர்கள் குறித்து கணக்கெடுப்பு


பாறை விழுந்து தாய்-மகள் பலி, மலையடிவாரத்தில் புறம்போக்கு இடங்களில் வசிப்பவர்கள் குறித்து கணக்கெடுப்பு
x
தினத்தந்தி 15 Nov 2021 10:18 PM IST (Updated: 15 Nov 2021 10:18 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் வீட்டின் மீது பாறை விழுந்து தாய் -மகள் உயிரிழந்ததை தொடர்ந்து மலையடிவாரத்தில் புறம்போக்கு இடங்களில் வசிப்பவர்கள் குறித்து கணக்கெடுக்கும்படி கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

வேலூர்

வேலூரில் வீட்டின் மீது பாறை விழுந்து தாய் -மகள் உயிரிழந்ததை தொடர்ந்து மலையடிவாரத்தில் புறம்போக்கு இடங்களில் வசிப்பவர்கள் குறித்து கணக்கெடுக்கும்படி கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.
பாறை விழுந்து 
தாய் -மகள் பலி

வேலூர் காகிதப்பட்டறை மலையடிவாரத்தில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தவர் பிச்சாண்டி. இவருடைய மனைவி ரமணி (வயது 45), மகள் நிஷாந்தி (24). டீக்கடையில் பணிபுரிந்து வரும் பிச்சாண்டி நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் ரமணி, நிஷாந்தி மட்டும் வீட்டில் இருந்தனர். வேலூரில் பெய்த பலத்த மழையினால் மாலை 3 மணியளவில் காகிதப்பட்டறை மலையின் சரிவில் காணப்பட்ட 100 டன்னுக்கும் மேற்பட்ட எடையுள்ள ராட்சத பாறை சரிந்து பிச்சாண்டி வீட்டு மேற்கூரையில் விழுந்தது. இதில், கட்டிட இடுபாடுகளில் ரமணி, நிஷாந்தி ஆகியோர் சிக்கி கொண்டு உயிருக்கு போராடினர்.

வேலூர் தீயணைப்புத்துறையினர், போலீசார், அரக்கோணத்தை சேர்ந்த தேசிய பேரிடர் மீட்புபடையினர் அவர்களை உயிருடன் மீட்க தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால் ரமணி, நிஷாந்தி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கணக்கெடுப்பு

வேலூர் நகரில் உள்ள மலைகளில் எப்போது விழும் என்று தெரியாத ஆபத்தான நிலையில் காணப்படும் பாறைகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள், மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன், மலைகளில் ஆபத்தான நிலையில் காணப்படும் பாறைகள் குறித்து கணக்கெடுக்க வனத்துறை மற்றும் வருவாய்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அதேபோல் மாவட்டம் முழுவதும் மலையடிவாரங்களில் அரசு புறம்போக்கு இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள் குறித்தும், அங்கு வசிக்கும் நபர்கள் பற்றியும், அவர்களுக்கு சொந்தமாக வேறு இடத்தில் இடம் அல்லது வீடு ஏதேனும் உள்ளதா என்று வருவாய்த்துறையினர் கணக்கெடுக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

சொந்த வீடு, இடம்

இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறுகையில், தொடர் மழையினால் மலையில் இருந்து மேலும் பாறைகள் உருண்டோடி வீடுகளில் விழ வாய்ப்புள்ளது. எனவே மலையடிவாரத்தில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலையடிவாரத்தில் அரசின் புறம்போக்கு இடம் எவ்வளவு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அங்கு வீடு கட்டி வசிப்பவர்களுக்கு சொந்த வீடு, இடம் உள்ளதா என்று கணக்கெடுக்கும் பணி விரைவில் நடைபெற உள்ளது. சொந்த வீடோ, இடமோ இல்லாத நபர்களுக்கு அரசின் சார்பில் வீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.

Next Story