காட்பாடியில் 2 வாலிபர்களை கொன்று உடல்கள் பாலாற்றில் வீச்சு
காட்பாடியில் மது குடித்தபோது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 2 வாலிபர்கள் படுகொலை செய்யப்பட்டு பாலாற்றில் வீசப்பட்டனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காட்பாடி
காட்பாடியில் மது குடித்தபோது நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 2 வாலிபர்கள் படுகொலை செய்யப்பட்டு பாலாற்றில் வீசப்பட்டனர். இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாலிபர்கள் மாயம்
இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
வேலூர் காட்பாடி வண்டறந்தாங்கல் காலனியை சேர்ந்தவர்கள் விஜய் (வயது 20), நேசக்குமார் (19). கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு வெளியே சென்ற 2 பேரும் அதன்பின் வீடு திரும்பவில்லை.
அவர்களின் பெற்றோர்கள் பல இடங்களில் தேடினர். ஆனால் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
நேற்று விருதம்பட்டு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த 3 இளைஞர்கள் சிக்கினர். அவர்கள் விருதம்பட்டு பகுதியை சேர்ந்த பாலா (25), பரத் (19) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.
தகராறில் 2 பேர் கொலை
இவர்கள் உள்பட வண்டறந்தாங்கல் காலனி மற்றும் விருதம்பட்டு பகுதிகளை சேர்ந்த நண்பர்கள் 8 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலாற்றங்கரையோரத்தில் மது குடித்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது விஜய் மற்றும் நேசக்குமார் ஆகியோரை மற்ற 6 பேரும் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளனர். இருவரின் உடல்களையும் அவர்கள் பாலாற்றில் வீசி விட்டு தப்பி விட்டதாக 3 பேரும் தெரிவித்தனர்.
பாலாற்றில் தேடுதல் வேட்டை
இதனை தொடர்ந்து கொலை செய்யப்பட்ட விஜய், நேசக்குமார் ஆகியோர் உடல்களை மீட்க லத்தேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான தனிப்படை போலீசார் பாலாற்றுக்கு சென்றனர். பல இடங்களில் தேடியும் உடல்கள் கிடைக்கவில்லை. இதனிடையே பிடிபட்ட பாலா, பரத் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை பாலாற்றுக்கு அழைத்து சென்று எங்கு கொலை செய்து வீசினார்கள் என்பது குறித்து விசாரணை நடத்த உள்ளனர்.
முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? அல்லது என்ன காரணம்? என்பது குறித்து விருதம்பட்டு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட வாலிபர்கள் உடல்கள் மீ்்ட்கப்பட்ட பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் தலைமறைவான 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒரே கிராமத்தைச் சேர்ந்த 2 வாலிபர்கள் கொலை செய்து ஆற்றில் வீசப்பட்ட சம்பவம் காட்பாடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story