வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் குளம்போல் தேங்கிய வெள்ளம்
வேலூரில் கல்வெட்டில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக கிரீன் சர்க்கிள் பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. அதனால் வாகனங்கள் தண்ணீரில் மிதந்தபடி சென்றன.
வேலூர்
வேலூரில் கல்வெட்டில் ஏற்பட்ட அடைப்பு காரணமாக கிரீன் சர்க்கிள் பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது. அதனால் வாகனங்கள் தண்ணீரில் மிதந்தபடி சென்றன.
வடகிழக்கு பருவமழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையினால் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்புகளை சுற்றி வெள்ளம் தேங்கியது. குறிப்பாக வேலூரில் கன்சால்பேட்டை, முள்ளிப்பாளையம், திடீர்நகர், சேண்பாக்கம் கோரிமேடு உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. தொடர் மழையால் பொதுமக்களின் இயல்புநிலை மிகவும் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் வேலூரில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடி, மின்னலுடன் மழை கொட்டி தீர்த்தது. அதனால் சாலையோரங்களில் வெள்ளம் ஆறு போன்று பாய்ந்தோடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்புகளை சுற்றி மீண்டும் மழைநீர் தேங்கியது.
குளம்போல் தேங்கிய வெள்ளம்
வேலூர் முத்துமண்டபம், புதிய பைபாஸ்சாலை, காட்பாடி சாலை, தேசிய நெடுஞ்சாலை மற்றும் சேண்பாக்கத்தில் ஒருபகுதியில் இருந்து வந்த மழைநீர் கிரீன்சர்க்கிள் பகுதியில் குளம்போல் தேங்கி நின்றது. சுமார் 3 அடிக்கும் மேலாக தேங்கி காணப்பட்டது. அதனால் வேலூரில் இருந்து காட்பாடி, சித்தூர் நோக்கி சென்ற இருசக்கரவாகனங்கள், கார், ஆட்டோ, பஸ் உள்ளிட்ட வாகனங்களில் தண்ணீரில் மிதந்தபடி சென்றன.
சில மோட்டார்சைக்கிளின் சைலன்சர்களில் தண்ணீர் புகுந்தது. அதனால் அவை பாதியின் நின்றன. அவற்றை வாகன ஓட்டிகள் தள்ளியபடி சென்றனர். இதனால் மோட்டார் சைக்கிளில் அலுவலகம் சென்றவர்கள், பள்ளிக்கு குழந்தைகளை மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்ற பெற்றோர் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர். அந்த பகுதியில் அனைத்து வாகனங்களும் மெதுவாக சென்றதால் கிரீன்சர்க்கிளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கல்வெட்டில் அடைப்பு
சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்வெட்டில் (சிறிய பாலம்) ஏற்பட்ட அடைப்பு காரணமாக அந்த பகுதியில் மழைநீர் தேங்கியதாக கூறப்பட்டது. இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலை துறையினர் பொக்லைன் எந்திரம் மூலம் அடைப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கல்வெட்டு வழியாக கூட்டு குடிநீர் குழாய் சென்றதால் பணிகள் மெதுவாக மேற்கொள்ளப்பட்டன. கல்வெட்டு அடைப்புகள் இரவு 7 மணியளவில் அகற்றப்பட்டன. இதையடுத்து கிரீன்சர்க்கிள் பகுதியில் தேங்கிருந்த வெள்ளம் படிப்படியாக வடிய தொடங்கின.
கல்வெட்டு அடைப்பை அகற்றி, சாலையில் தேங்கிய வெள்ளத்தை உடனடியாக அப்புறப்படுத்த மாநகராட்சி, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டினர்.
---
Related Tags :
Next Story