ஏரி மதகு உடைந்து 3 கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்தது


ஏரி மதகு உடைந்து 3 கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்தது
x
தினத்தந்தி 15 Nov 2021 10:40 PM IST (Updated: 15 Nov 2021 10:40 PM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விடிய, விடிய பெய்த மழையால் ஏரி மதகு உடைந்து 3 கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் 1,000 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின.

உளுந்தூர்பேட்டை, 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை விடிய, விடிய மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலை மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. 
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செரத்தனூர் கிராம ஏரிக்கு அதிகளவு தண்ணீர் வந்தது. இதனால் ஏரி முழுமையாக நிரம்பி, மதகு உடைந்தது. இதில் இருந்து தண்ணீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடி மடப்பட்டு, மேட்டாத்தூர், செரத்தனூர் கிராமங்களுக்குள் புகுந்தது. சில தெருக்கள் வாய்க்கால்களாக மாறியது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் கிராம மக்கள் கடும் அவதி அடைந்தனர். மடப்பட்டில் பாதிக்கப்பட்ட 50 பேர் மீட்கப்பட்டு, அங்குள்ள அரசு பள்ளிக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்ததும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு, மதகுகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 

குமாரமங்கலம் 

இதேபோல் குமாரமங்கலம் ஏரி நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. ஆனால்              உபரிநீர் செல்லும் வாய்க்கால் தூர்வாரப்படாததால் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் 100 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த பயிர்கள், தண்ணீரில் மூழ்கின. இதை பார்த்து கண்ணீர் வடித்த விவசாயிகள், தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். எலவனாசூர்கோட்டை சார்பதிவாளர் அலுவலகத்திலும் மழைவெள்ளம் புகுந்தது. இதனால் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர். 

திருநாவலூர் 

திருநாவலூர் ஒன்றியத்தில் தொடர்ந்து 5 மணி நேரம் பெய்த கன மழையால் ஏரிகள் நிரம்பின. அதில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் விளைநிலங்களுக்குள் புகுந்து பெருத்த சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது திருநாவலூர் ஒன்றியத்தில் மட்டும் 1000 ஏக்கர் விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. 

மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. ஆறுதல் 

இது பற்றி அறிந்ததும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார். அப்போது அவர், இலவச வீட்டுமனை பட்டாவுடன், பசுமை வீடுகளும் கட்டித்தரப்படும் என்றார். மேலும் கிராம மக்கள் மற்றும் விளைநிலத்திற்குள் புகுந்த மழைநீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. உத்தரவிட்டார். ஆய்வின்போது ஒன்றியக்குழு தலைவர் சாந்தி இளங்கோவன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பத்மநாபன், மாவட்ட கவுன்சிலர் சந்திரசேகரன், தி.மு.க. நிர்வாகிகள் கோவிந்தன், கிளாப்பாளையம் மணிகண்டன், சிவராஜ் உள்பட பலர் உடன் இருந்தனர். 

கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்தது 

கள்ளக்குறிச்சி அருகே தென்கீரனூரில் உள்ள பெரிய ஏரி நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. உபரிநீர் செல்லக்               கூடிய வாய்க்கால் நிரம்பி, தென்கீரனூர் கிராமத்துக்குள் தண்ணீர் புகுந்தது. இதில் அம்பேத்கர் நகரில் உள்ள 2 தெருக்களில் வெள்ளம்போல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி மேடான பகுதிக்கு சென்றனர். இதில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அந்த வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.  இது பற்றி தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் சரவணன், தாசில்தார் விஜயபிரபாகரன், மாவட்ட கவுன்சிலர் முருகேசன், ஊராட்சி மன்ற தலைவர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து கிராமத்திற்குள் தண்ணீர் புகுவதை தடுக்கவும், புகுந்த தண்ணீரை வடியவைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

Next Story