1 முதல் 8 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு மாணவ மாணவிகளுக்கு ஆரத்தி எடுத்தும் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு
விழுப்புரம் மாவட்டத்தில் 19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. உற்சாகமாக வந்த மாணவ மாணவிகளுக்கு ஆரத்தி எடுத்தும் பூரண கும்ப மரியாதை அளித்தும் வரவேற்பு அளிக்கப்பட்டது
விழுப்புரம்
1,801 பள்ளிகள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து பெரும்பாலான மாவட்டங்களில் 19 மாதங்களுக்கு பிறகு கடந்த 1-ந் தேதி முதல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள மாணவ- மாணவிகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால் பருவமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படாமல் தொடர் விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில் மழை சற்று ஓய்ந்த நிலையில் நேற்று முதல் விழுப்புரம் மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையுள்ள மாணவ- மாணவிகளுக்கு கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 1,801 பள்ளிகள் திறக்கப்பட்டன. காலை 7 மணியளவில் மாணவ- மாணவிகளை வரவேற்க ஆசிரியர்கள் பள்ளி நுழைவு வாசலில் தயார் நிலையில் இருந்தனர். மாணவர்களை வரவேற்கும் வகையில் வாழை மரங்கள், தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.
மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பு
இதையடுத்து 19 மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் திறந்த மகிழ்ச்சியில் மாணவ- மாணவிகள் உற்சாகமாக பள்ளிக்கு வந்தனர். அவர்களுக்கு அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலரும் சாக்லெட், கமர்கட், லட்டு உள்ளிட்டவற்றை கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.
விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பள்ளிகளில் மாணவ- மாணவிகளை ஆரத்தி எடுத்தும், மலர்தூவி பூக்கள் கொடுத்தும், சந்தனம் வைத்து, பூரண கும்ப மரியாதை அளித்தும் சிறப்பான முறையில் வரவேற்பு அளித்தனர்.
பாதுகாப்பு வழிமுறைகள்
அதன் பிறகு தெர்மல் ஸ்கேனர் கருவியின் மூலம் மாணவ-மாணவிகளின்உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது. தொடர்ந்து சானிடைசர் கொடுத்து அதன் மூலம் கைகளை நன்கு சுத்தமாக கழுவ வைத்து வகுப்பறைக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 2,09,182 மாணவ- மாணவிகள் படித்து வருகிற நிலையில் தற்போது கொரோனா பாதுகாப்பு விதிமுறைப்படி சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பிறகு, தன்னுடன் படித்தவர்களை நேரில் பார்த்தவுடன் தங்களது மகிழ்ச்சியை மாணவ- மாணவிகள் பரிமாறிக்கொண்டனர்.
Related Tags :
Next Story