நெல்லிக்குப்பம் அருகே தென்பெண்ணையாற்றில் மூழ்கி மாயமான பட்டதாரி வாலிபரின் உடல் மீட்பு அமைச்சர் சி.வெ.கணேசன் நேரில் அஞ்சலி
நெல்லிக்குப்பம் அருகே தென்பெண்ணையாற்றில் மூழ்கி மாயமான பட்டதாரி வாலிபரின் உடல் நேற்று காலை மீட்கப்பட்டது. ஆற்றில் மூழ்கி பலியான 3 பேரின் உடல்களுக்கு அமைச்சர் சி.வெ.கணேசன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
நெல்லிக்குப்பம்,
ஆற்றில் குளித்தனா்
நெல்லிக்குப்பம் அருகே உள்ள முள்ளிகிராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவருடைய மகள் மாளவிகா(வயது 20), மகன் மாதவன்(20). இரட்டையர்களான இவர்கள் இருவரும் தனது உறவினர் லோகேஸ்வரன்(17) என்பவருடன் நேற்று முன்தினம் மதியம் அழகியநத்தம் தென்பெண்ணை ஆற்றுக்கு குளிக்க சென்றனர். அப்போது 3 பேரும் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினர். இதைபார்த்து அதிர்ச்சியடைந்த அருகில் குளித்துக் கொண்டிருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கிய 3 பேரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டதோடு, இதுபற்றி நெல்லிக்குப்பம் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர்.
தேடும் பணி நிறுத்தம்
அதன்பேரில் நிலைய அலுவலர் சிவா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்துஅப்பகுதி இளைஞர்களுடன் இணைந்து 2 படகுகள் மூலம் ஆற்றில் மூழ்கிய மாளவிகா உள்ளிட்ட 3 பேரையும் தேடும்பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி மாளவிகா, லோகேஸ்வரன் ஆகியோரை பிணமாக மீட்டதோடு, பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இரவு 11 மணி வரை தேடியும் மாதவனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து இரவு நீண்ட நேரம் ஆனதால் மாதவனை தேடும் பணி பாதியில் நிறுத்தப்பட்டது.
பட்டதாரி வாலிபர் உடல் மீட்பு
இதையடுத்து நேற்று காலை 6 மணி முதல் தீயணைப்பு வீரர்கள் 50-க்கும் மேற்பட்டோர் படகுகள் மூலம் மாயமான மாதவனை தேடும் பணியில் மீண்டும் ஈடுபட்டனர். அப்போது காலை 8 மணியளவில் மாதவன் உடல் பிணமாக மீட்கப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே ஆற்றில் மூழ்கி பலியான 3 பேரின் உடல்கள் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களுடைய குடும்பத்தினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. உயிரிழந்த மாதவன், மாளவிகா இருவரும் பி.எஸ்சி. பட்டதாரி ஆவார்கள். லோகேஸ்வரன் பிளஸ்-1 படித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் சி.வெ.கணேசன் ஆறுதல்
இதையடுத்து முள்ளிகிராம்பட்டில் வைக்கப்பட்டிருந்த பட்டதாரி வாலிபர் உள்பட 3 பேரின் உடல்களுக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் நேற்று மாலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தியதோடு, உயிரிழந்தவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறி நிதி வழங்கினார். அப்போது கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, தாசில்தார் பிரகாஷ், மண்டல துணை தாசில்தார் சிவக்குமார், நகர தி.மு.க. செயலாளர் மணிவண்ணன், நகர நிர்வாகிகள் பார்த்தசாரதி, சாமிநாதன், தமிழன் அருள் மற்றும் பலர் உடன் இருந்தனர். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் 3 பேரின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
Related Tags :
Next Story