உறவினர்கள் சாலைமறியல்
திருவாரூர் அருகே வாலிபர் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 5 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவாரூர்:
திருவாரூர் அருகே வாலிபர் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 5 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாலிபர் வெட்டிக்கொலை
திருவாரூர் அருகே உள்ள அகரதிருநல்லூர் காமராஜ் தெருவை சேர்ந்த செல்வமணி மகன் குமரேசன் (வயது 35). இவருக்கு சுதா என்ற மனைவியும், இரணியன் என்ற குழந்தையும் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை குமரேசன் மோட்டார் சைக்கிளில் காணூரில் உள்ள மாமனார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கிடாரங்கொண்டான் என்ற இடத்தில் சென்ற போது மர்ம கும்பல் அரிவாளால் குமரேசனை வெட்டி கொலை செய்தனர்.
இதுகுறித்து திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை நடந்த இடத்திற்கு அருகில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சியை வைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
சாலைமறியல்
இந்தநிலையில் நேற்று வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வாலிபரின் கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி அகரதிருநல்லூர் பிரதான சாலையில் குமரேசன் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருவாரூர்-கும்பகோணம் சாலையில் 3 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலைமறியல் கைவிடப்பட்டது. அதனை தொடர்ந்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி மீது ஒருவர் கல் வீசியதில் கண்ணாடி உடைந்தது.
போக்குவரத்து பாதிப்பு
இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாரிடம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வடிவழகன் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கொலைக்கு காரணமானவர்கள் விரைவில் கைது செய்யப்படுவர் என அவர் உறுதி அளித்தார். அதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு இறந்தவரின் உடலை அவரது உறவினர்கள் வாங்கி சென்றனர். இதனால் திருவாரூர்-தஞ்சை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story