ஆம்பூரில் கடத்தல் நாடகமாடி பணம் பறிக்க முயன்ற 5 பேர் கைது


ஆம்பூரில் கடத்தல் நாடகமாடி பணம் பறிக்க முயன்ற 5 பேர் கைது
x
தினத்தந்தி 15 Nov 2021 11:23 PM IST (Updated: 15 Nov 2021 11:23 PM IST)
t-max-icont-min-icon

ஆம்பூரில் கடத்தல் நாடகமாடி பணம் பறிக்க முயன்ற வெங்காய வியாபாரி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆம்பூர்

ஆம்பூரில் கடத்தல் நாடகமாடி பணம் பறிக்க முயன்ற வெங்காய வியாபாரி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

வெங்காய வியாபாரி

ஆம்பூர் மு.க.கொல்லை பகுதியை சேர்ந்தவர் அமீது (வயது 21). இவர் தனது தந்தை மற்றும் மாமா அசேன் ஆகியோருடன் சேர்ந்து வெங்காய வியாபாரம் செய்து வருகிறார். இவர்களது குடும்பத்தினர் ஆம்பூர் 2-வது தார்வழி பகுதியில் வீட்டுமனை ஒன்றை வாங்கியுள்ளனர். இதற்காக முன்பணம் பணம் செலுத்தியுள்ளனர். மீதி தொகை ரூ.10 லட்சத்தை நேற்று செலுத்துவதாக ஒப்பந்தம் செய்திருந்தனர். இதற்காக ரூ.10 லட்சத்தை அசேன் தாயார் வைத்திருந்தார். 

இந்தநிலையில் அமீது நேற்று முன்தினம் இரவு அருகிலுள்ள மெடிக்கலுக்கு சென்று மாத்திரை வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். எங்கும் கிடைக்கவில்லை. நேற்று அதிகாலை அமீது செல்போனிலிருந்து அசேனின் செல்போனுக்கு போன் வந்தது. 

ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டல்

அதில் பேசிய மர்ம நபர் அமீதை நாங்கள் கடத்தி வைத்துள்ளோம். அவரை ஒப்படைக்க வேண்டுமெனில் ரூ.10 லட்சம் தரவேண்டும். போலீசில் இதுபற்றி தெரிவிக்க கூடாது என மிரட்டியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அசேன் ஆம்பூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் போலீசார் 5 குழுக்களாக பிரிந்து அமீதின் செல்போன் எண்ணை கொண்டு அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்தனர். அதில் அவர்கள் வெங்கிலி அருகே இருந்து பேசியது தெரியவந்தது. உடனே அந்த இடத்திற்கு தனி கார்களில் மாறுவேடத்தில் போலீசார் விரைந்து சென்றனர். 

நாடகமாடிய 5 பேர் கைது

அப்போது ஒரு காரில் அமீது இருப்பது தெரியவந்தது. உடனே காரை சுற்றிவளைத்தனர். உடனே காரில் இருந்து 4 பேர் தப்பியோட முயன்றனர். அவர்கள் 4 பேரையும் போலீசார் விரட்டி சென்று பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். 

விசாரணையில் அவர்கள் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட அமீதின் நண்பர்கள் என்பதும், வீட்டில் இருக்கும் ரூ.10 லட்சத்தை கடத்தல் நாடகமாடி பறிக்க முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து கடத்தல் நாடகமாடிய அமீது (வயது 21) அவரது நண்பர்கள் முகமது சித்திக் (24), பயாஸ் அகமது (20), ஹர்ஷத் அபிக் (24), அமித் சுல்தான் (25) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.


Next Story