மாவட்டத்தில் மீண்டும் இடி-மின்னலுடன் பலத்த மழை
மாவட்டத்தில் மீண்டும் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தது. இதன் காரணமாக ஏரி-குளங்கள் நிரம்பின. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன. கடந்த சில நாட்களாக ஓய்ந்திருந்த மழை மீண்டும் தொடங்கியுள்ளது. அந்தவகையில் புதுக்கோட்டையில் நேற்று முன்தினம் இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. நள்ளிரவில் கொட்டித்தீர்த்த இந்த மழையினால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று காலையில் வெயிலின் தாக்கம் கொஞ்சம் இருந்தது.
இந்தநிலையில் மாலை 3 மணிக்கு மேல் வானில் கருமேகங்கள் திரண்டு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை இடைவிடாமல் 2 மணி நேரத்திற்கு மேலாக கொட்டித் தீர்த்தது. தொடர்ந்து மழை தூறியபடி இருந்தது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. வட்டார போக்குவரத்து அதிகாரி அலுவலக வளாகத்தில் தண்ணீர் சூழ்ந்தது.
பள்ளிக்குள் தண்ணீர் புகுந்தது
புதுக்கோட்டை பல்லவன் குளத்தின் அருகே உள்ள சாந்தநாத சுவாமி கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது. இதேபோல திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில் அருகே உள்ள குளத்தில் தண்ணீர் நிரம்பி, ஒரு புறம் கரை உடைந்து தண்ணீர் வெளியேறியது. இந்த தண்ணீர் வரத்துவாரி வழியாக கால்வாயில் வெளியேறி சாலையில் ஓடியது. மேலும், அருகில் உள்ள அரசு பெண் கள் உயர்நிலைப்பள்ளி வளாகத்திற்குள் புகுந்தது. இதனால் மணல் மூட்டைகள் கொண்டு பள்ளி நுழைவுவாயிலில் பொதுமக்கள் தடுப்பு ஏற்படுத்தினர். இருப்பினும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சாலையிலும் தண்ணீர் ஆறுபோல பாய்ந்தோடியது. புதுக்கோட்டை மேலராஜ வீதி, கீழ ராஜ, வடக்கு ராஜ வீதி உள்ளிட்ட கடைவீதிகளில் தண்ணீர்பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் தத்தளித்தப்படி சென்றன. பெரியார் நகரில் சாக்கடை நீரோடு, மழை நீர் கலந்து சாலையில் பாய்ந்தோடியது. காந்திநகர், அசோக்நகர், பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.
இதேபோல மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்தது. ஏற்கனவே தொடர்ந்து பெய்த மழையினால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. தண்ணீர் வடியாமல் இருக்கிற நிலையில் மீண்டும் பலத்த மழை பெய்வதினால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.
வீடுகளின் சுவர்கள் இடிந்தன
விராலிமலை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையின் காரணமாக மேப்பூதகுடி கிராமம் புரவிப்பண்ணையை சேர்ந்த கருப்பையா என்பவரின் குடிசை இடிந்து சேதமடைந்தது. அப்போது இடிபாடுகளுக்கு இடையே சிக்கி ஆடு ஒன்று செத்தது. இதேபோல் கல்குடி கிராமம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ராமசாமி என்பவரின் குடிசையின் ஒரு பக்க சுவர் கத்தலூர் கிராமம் கவுண்டம்பட்டியைச் சேர்ந்த இளஞ்சியம் என்பவருக்கு சொந்தமான குடிசை ஆகியவை கனமழைக்கு இடிந்து சேதம் அடைந்தன.
திருவரங்குளத்தில் உடைப்பு
திருவரங்குளம் வட்டார பகுதிகளில் நேற்று கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக திருவரங்குளம் சிவன் கோவிலுக்குள் மழைநீர் புகுந்து குளம்போல காட்சி அளிக்கிறது. மேலும், தேரோடும் தெற்கு ரத வீதி சாலைகள் முழுவதும் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. கே.வி.எஸ்.நகர், அழகப்பா நகர் மற்றும் திருவரங்குளம் அருகே உள்ள மேட்டுப்பட்டி இந்திரா நகர் பகுதியில் வீடுகள் தண்ணீரில் மூழ்கின. இதேபோல் மேட்டுப்பட்டி நந்தனவயல், இசை நகர், திருநகர், பாலாஜி நகர், குறிஞ்சி நகர், பொன்னகர், செங்கைதோப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.
மேட்டுப்பட்டி இந்திரா நகரில் பாசன குளத்தில் உடைப்பு ஏற்பட்டு ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதியில் வசித்து வரும் ஏழை-எளிய மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் முறையான வரத்து வாய்க்கால் அமைக்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் கொட்டும் மழையிலும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அவர்களிடம் ஆலங்குடி தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
Related Tags :
Next Story