தங்கம் என நினைத்து அடகு கடையில் நகைகளை திருடிய மர்ம நபர்கள்


தங்கம் என நினைத்து அடகு கடையில் நகைகளை திருடிய மர்ம நபர்கள்
x
தினத்தந்தி 16 Nov 2021 1:01 AM IST (Updated: 16 Nov 2021 1:01 AM IST)
t-max-icont-min-icon

தங்கம் என நினைத்து அடகு கடையில் கவரிங் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

மீன்சுருட்டி:

நகைகள் திருட்டு
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள குருவாலப்பர் கோவில் கிராமத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன்(வயது 49). இவர் திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் வீட்ைடயொட்டி மளிகைக்கடை மற்றும் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இதில் அடகு கடையில் கவரிங் நகைகளை வைத்தும் அவர் விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில் வெங்கடேசன் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டில் தூங்க சென்றார். நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் அவசர, அவசரமாக அடகு கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். மேலும் அங்கிருந்த கவரிங் நகைகள் அனைத்தையும் தங்க நகைகள் என நினைத்த அவர்கள், தங்களுக்கு சரியான வேட்டை என்ற மகிழ்ச்சியில் அவற்றை திருடியுள்ளனர். பின்னர் நகைகளை மூட்டையாக கட்டிக்கொண்டு, அவற்றுடன் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
போலீசார் விசாரணை
அப்போது சத்தம் கேட்டு எழுந்த வெங்கடேசன், வெளியே வந்து பார்த்தபோது அடகு கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் உள்ளே சென்று பார்த்தபோது சுமார் ரூ.10 ஆயிரம் மதிப்பிலான கவரிங் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. மேலும் கடை மற்றும் வீட்டின் முன்பு வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை துணியால் மூடி மர்ம நபர்கள் இந்த திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
இது குறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
காட்டுப்பகுதியில் வீசினர்
இதில், நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களுக்கு, அவை தங்கமில்லை கவரிங் என்பது தெரியவந்துள்ளது. இதனால் ஏமாற்றமடைந்த அவர்கள் ஆத்திரத்தில் அங்குள்ள முந்திரி காட்டுப்பகுதியில் கவரிங் நகைகளை வீசிச்சென்றது, போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் தூக்கி வீசப்பட்ட கவரிங் நகைகளை மீட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story