பட்டா, கான்கிரீட் வீடுகள் கேட்டு மனு


பட்டா, கான்கிரீட் வீடுகள் கேட்டு மனு
x
தினத்தந்தி 15 Nov 2021 7:31 PM GMT (Updated: 15 Nov 2021 7:31 PM GMT)

பட்டா, கான்கிரீட் வீடுகள் கேட்டு கலெக்டரிடம் மக்கள் மனு அளித்தனர்.

தாமரைக்குளம்:

பட்டா வழங்க வேண்டும்
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தலைமை தாங்கினார். இந்நிலையில் அரியலூர் புறவழிச்சாலை அருகில் வருவாய்த்துறையினரால் ஒதுக்கப்பட்ட இடத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குறவர் இன மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள், தாங்கள் வசித்து வரும் பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவதாகவும், தாங்கள் குடியிருக்கும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், மனு அளிக்க வந்தனர். அப்போது மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதிக்கு பாசி மணி மாலை அணிவித்து, தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர். அப்போது, நாங்கள் அப்பகுதியில் சுமார் 20 வருடத்திற்கு மேலாக வசித்து வருகிறோம். எனவே நாங்கள் வசித்துவரும் இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும், என்று வலியுறுத்தினர்.
மோசமான நிலையில் வீடுகள்
இதேபோல் அரியலூர் எருத்துக்காரன்பட்டி இருளர் இன மக்கள், தாங்கள் குடியிருக்கும் வீடுகள் 20.8.1958-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது. பின்னர் கடந்த 2004-ம் ஆண்டு ஊராட்சியால் சிறுசிறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் தற்போது அந்த வீடுகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. சில வீடுகள் இடிந்து விழும் சூழல் உள்ளது. தற்போது அப்பகுதியில் 150 குடும்பங்களை சேர்ந்த சுமார் 500 பேர் வசித்து வருகிறோம். எனவே தங்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டும். மேலும் பட்டா இல்லாத குடும்பங்கள், வீடு இல்லாத இருளர் குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கி வீடு கட்டித்தர வேண்டும் என்று கோரி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அரியலூர் மாவட்டம் அமீனாபாத் கிராமத்தில் சட்டவிரோதமாக சில சுண்ணாம்பு கால்வாய்கள் இயங்கி வருவதாகவும், அவற்றில் இருந்து வெளியேறும் புகையால் அப்பகுதி வழியாக சென்று வரும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும், எனவே மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து அரசின் அனுமதி இன்றி இயங்கும் சுண்ணாம்பு கால்வாய்களின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதியை சேர்ந்த சரவணன் மற்றும் பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்
மாவட்ட பா.ஜ.க. செயலாளர் கோகுல்பாபு கொடுத்த மனுவில், தமிழக அரசு, அனைத்து பயிர்களுக்கும் காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது. சமூக ஆர்வலர் பாலை திருநாவுக்கரசு அளித்த மனுவில், கீழப்பழுவூரை சேர்ந்த மொழிப்போர் தியாகி சின்னசாமிக்கு மணிமண்டபத்தை விரைந்து அமைக்க வேண்டும். திருமானூர் ஒன்றியம் மஞ்சமேடு கிராமத்தில் சமத்துவபுரம் அமைக்க வேண்டும். நடமாடும் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது.
கூட்டத்தில் உதவித்தொகைகள், பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 435 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுத்து குறித்த காலத்திற்குள் தீர்வு காண வேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தார். கூட்டத்தில் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story