இறந்தவர் உடலை மயானத்திற்கு முழங்கால் அளவு சேற்றில் சுமந்து செல்லும் அவலம்
இறந்தவர் உடலை மயானத்திற்கு முழங்கால் அளவு சேற்றில் சுமந்து செல்லும் அவல நிலை உள்ளது.
தா.பழூர்:
சேறும், சகதியுமான சாலை
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியம் இருகையூர் காலனி தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கான தனி மயானம் ஊருக்கு வெளியே சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மயானத்திற்கு செல்லும் வழியில் சுத்தமல்லி நீர்த்தேக்க அணையில் இருந்து கோவைத்தட்டை ஏரிக்கு செல்லும் நீர்வடிப்பகுதி அமைந்துள்ளது. அந்த வாய்க்காலை கடந்து செல்வதற்கு கடந்த ஆண்டு ஒரு தரைப்பாலம் அமைத்து தரப்பட்டது.
ஆனால் மழைக்காலங்களில் அந்த தரைப்பாலத்திற்கு மேலே இடுப்பளவு தண்ணீர் கோவைத்தட்டை ஏரிக்கு காட்டாறு போல ஓடும் நிலை அவ்வப்போது ஏற்படுவது உண்டு. இந்த ஆண்டு கோவைத்தட்டை ஏரி தூர்வாரப்பட்டதால், அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீர் விரைவாக ஏரிக்குச் சென்று விட்டது. இருப்பினும் தரைப்பாலத்தை தொடர்ந்து உள்ள சாலை சேறும், சகதியுமாக களி மண் சாலை போன்று அமைந்துள்ளது. அந்தப்பகுதியில் மயானத்திற்கு செல்ல தார் சாலையோ அல்லது சிமெண்டு சாலையோ இதுவரை அமைத்து தரப்படவில்லை.
சேற்றில் சிக்கி கீழே விழுகின்றனர்
இதனால் இறந்தவர்களின் உடலை அந்த வழியாக மயானத்திற்கு கொண்டு செல்லும்போது, முழங்கால் அளவு சேற்றில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. அவ்வாறு சேறும், சகதியுமான சாலையில் உடலை எடுத்துச் செல்லும்போது சில சமயங்களில் இறந்தவர் உடலை சுமந்து செல்பவர்கள் சேற்றில் சிக்கி கீழே விழுந்து விடுகிறார்கள். இதனால் இறந்தவர் உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் படாதபாடு பட வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இந்நிலையில் அந்த கிராமத்தை ேசர்ந்த விவசாயியான தன்ராஜ்(வயது 68) உடல்நலக்குறைவால் நேற்று முன்தினம் இறந்தார். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக நேற்று மாலை அவரது உறவினர்கள் உடலை சுமந்து கொண்டு மயானத்திற்கு வந்தனர். அப்போது சேறும், சகதியுமான முழங்கால் அளவு சேற்றில் இங்கும், அங்குமாக நடந்து சென்றபோது திடீரென சேற்றில் இருந்த முள் குத்தி உறவினர்கள் சிலர் நிலைதடுமாறி கீழே விழுந்த சம்பவம் காண்போரை வேதனையில் ஆழ்த்தியது.
கோரிக்கை
பின்னர் ஒருவழியாக இறந்தவரின் உடலை மயானத்திற்கு கொண்டு சென்று அடக்கம் செய்தனர். இதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், எங்கள் பகுதி மக்கள் நீண்ட காலமாக மயானத்திற்கு செல்ல தரமான தார் சாலை அமைத்து தர அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களது சிரமமான சூழ்நிலையைப் புரிந்துகொண்டு அரசு இனிமேலாவது தார் சாலை அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story