கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் தர்ணா போராட்டம்
தென்காசி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
தென்காசி:
தென்காசி கலெக்டர் அலுவலகம் முன்பு கிராம மக்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஜனனி சவுந்தர்யா முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதி, பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தனிநபர் கடன், விதவை உதவித்தொகை உள்ளிட்ட 364 மனுக்கள் பெறப்பட்டன.
கிராம மக்கள் தர்ணா
சிவகிரி தாலுகா வேலாயுதபுரம் ஊர் பொதுமக்கள் பலர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தனர். அப்போது அவர்கள் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
வாசுதேவநல்லூர் யூனியன் கூடலூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேலாயுதபுரம் கிராமத்தில் கடந்த 3-11-2021 அன்று காலை 10 மணிக்கு ரேஷன் கடைக்கு சென்று வந்த ஆரோக்கியம் மனைவி மனோன்மணியை, அதே தெருவைச் சேர்ந்த இன்னாசி மகன் கிறிஸ்டோபர் வெட்டி படுகொலை செய்தார். பட்டப்பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் உள்ளனர். மேலும் மனோன்மணியை மட்டுமல்லாமல் கருப்பசாமி மற்றும் சூர்யா ஆகிய இருவரையும் வெட்டினார். இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கிறிஸ்டோபர் வெளியில் வந்ததும் மேலும் 3 பேரை வெட்டிக் கொல்வேன் என்று எச்சரித்து சென்று உள்ளார். எனவே எங்களது கிராம மக்கள் அமைதியுடனும் பாதுகாப்புடனும் வாழ கிறிஸ்டோபர் மீது வெளியில் வராதவாறு தகுந்த சட்டப்பிரிவுகளில் நடவடிக்கை எடுத்து எங்களை பாதுகாக்க கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சாலை ஆக்கிரமிப்பு
இந்து முன்னணி சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் வெங்கடேஷ், பா.ஜனதா மாவட்ட செயற்குழு உறுப்பினர் மகேஸ்வரன், இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் குளத்தூரான், தென்காசி நகர தலைவர் நாராயணன், நகர செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் கொடுத்துள்ள மனுவில், “கடையநல்லூர் தாலுகா பொய்கை கிராமத்தில் பஞ்சாயத்து சாலையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தென்காசி பாராளுமன்ற தொகுதி செயலாளர் வர்கீஸ் பொதுமக்களுடன் வந்து கொடுத்துள்ள மனுவில், “தென்காசி தாலுகா அலுவலகத்திற்கு மேற்கு பகுதியில் உள்ள கீழ வாலியன் பொத்தை பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் வசிக்கின்றனர். அவர்களுக்கு உள்ளாட்சித் துறை, எம்.எல்.ஏ.நிதி போன்றவற்றின் மூலம் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் அதற்கு 300 அடி மேற்கே மேல வாலியன் பொத்தை உள்ளது. அங்கு வசிக்கும் நரிக்குறவ மக்கள் சாலை வசதி, மின் விளக்குவசதி எதுவும் இல்லாமல் சிரமப்படுகிறார்கள். எனவே அங்கு வசிக்கும் 63 குடும்ப மக்களுக்கும் அடிப்படை வசதி செய்து கொடுக்க கேட்டுக்கொள்கிறேன்’’ என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story